தேனி மக்களவைத் தொகுதியில் 4-ஆவது முறையாக இணையும் திமுக - காங்கிரஸ் கூட்டணி

தேனி மக்களவைத் தொகுதி (முன்னர் பெரியகுளம் தொகுதி) பொதுத் தேர்தலில், திமுக-காங்கிரஸ் கட்சிகள் 4-ஆவது முறையாக கூட்டணி அமைத்து, களமிறங்குகின்றன.


தேனி மக்களவைத் தொகுதி (முன்னர் பெரியகுளம் தொகுதி) பொதுத் தேர்தலில், திமுக-காங்கிரஸ் கட்சிகள் 4-ஆவது முறையாக கூட்டணி அமைத்து, களமிறங்குகின்றன.
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர், பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, போடி, கம்பம், சேடப்பட்டி ஆகிய 5 சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.
இதில், கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் 1962-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 3 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியும், 1967, 1971-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் சுந்தந்திரக் கட்சியும், 1977-இல் அதிமுகவும், 1980-இல் திமுகவும், 1982-ஆம் ஆண்டு முதல்1991-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 4 தேர்தல்களில் அதிமுகவும், 1996-இல் திமுக வும், 1998, 1999-ஆம் ஆண்டுகளில் அதிமுகவும், 2004-இல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. பின்னர், தொகுதி மறு சீரமைப்பின் அடிப்படையில் பெரியகுளம் மக்களவைத் தொகுதி, தேனி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. 
இதில், தேனி சட்டப் பேரவை தொகுதி நீக்கப்பட்டு, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. மறுசீரமைக்கப்பட்ட தேனி மக்களவை தொகுதியில் கடந்த 2009-இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸும், 2014-இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவும் தொகுதியை கைப்பற்றின.
4-ஆவது முறையாக திமுக-காங்கிரஸ் கூட்டணி: மறுசீரமைப்புக்கு முந்தைய பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் கடந்த 1980-இல் நடைபெற்ற தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் திமுக வேட்பாளர் நா.நடராஜன் வெற்றி பெற்றார்.
அதையடுத்து, 24 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த 2004-ஆம் ஆண்டு 2-ஆம் முறையாக திமுக-காங்கிரஸ் கட்சிகள்  கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூண் வெற்றி பெற்றார்.
பின்னர், மறு சீரமைக்கப்பட்ட தேனி மக்களவைத் தொகுதியில் கடந்த 2009-இல் 3-ஆவது முறையாக திமுக-காங்கிரஸ் கூட்டணியில், அதிமுகவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜே.எம்.ஆரூண் மீண்டும் வெற்றி பெற்றார்.
அதையடுத்து கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டன. இதில், அதிமுக வெற்றிபெற்றது. 
இந்நிலையில், ஏற்கெனவே 3 முறை தொகுதியை கைப்பற்றிய திமுக- காங்கிரஸ் கூட்டணி, தற்போது 4-ஆவது முறையாக கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்கியுள்ளன.
மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி: மறுசீரமைப்புக்கு முந்தையை பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் 1998-இல் அதிமுக -பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், திமுகவை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட சேடப்பட்டி முத்தையா வெற்றி பெற்றார். இந்நிலையில், தற்போது அதிமுக-பாஜக கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com