தச்சுத் தொழிலாளியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு
By DIN | Published On : 24th March 2019 12:43 AM | Last Updated : 24th March 2019 12:43 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், கம்பத்தில் தச்சுத் தொழிலாளியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 4 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
கம்பம் வனச்சரகர் அலுவலக சாலையைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு (33). தச்சுத் தொழிலாளியான இவர், கம்பம் நந்தகோபாலன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், பாரதியார் நகரைச் சேர்ந்த இளங்கோ, ஜல்லிக்கட்டுத் தெருவைச் சேர்ந்த தெய்வேந்திரன், அண்ணாபுரத்தைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகியோரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். வாங்கிய பணத்திற்கு மேல் கூடுதலாக வட்டி கொடுத்து வந்துள்ளார்.
கடந்த சில நாள்களாக தொழில் முடக்கம் ஏற்பட்டதால் பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் வட்டியை கொடுக்க முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் ஆனந்த்பாபுவை தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.
இதுபற்றி ஆனந்தபாபு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. பாஸ்கரனிடம் புகார் அளித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் எம்.சுப்புலட்சுமிக்கு, எஸ்பி உத்தவிட்டார். இதனைத்தொடர்ந்து, 4 பேர் மீதும் கந்து வட்டிக் கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.