போடியில் பொறியியல் படிப்பு சேர்க்கை கலந்தாய்விற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி மையம் திறப்பு

போடி அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப் படிப்பு மாணவ, மாணவிகள் சேர்க்கை கலந்தாய்விற்கு

போடி அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப் படிப்பு மாணவ, மாணவிகள் சேர்க்கை கலந்தாய்விற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்வதற்கு உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பு சேர்க்கை கலந்தாய்விற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அரசு சார்பில் 44 இடங்களில் உதவி மையங்கள் திறக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில், போடி அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. 
இந்த உதவி மையத்தில் பொறியியல் படிப்பு சேர்க்கை கலந்தாய்விற்காக ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்யும் பணி வியாழக்கிழமை (மே 2) தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெறும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜூன் 6 ஆம் தேதி முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை உதவி மையத்தில் நடைபெறும். அதையடுத்து வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஆன்-லைன் மூலம் மாணவ, மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும்.
பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாணவர் சேர்க்கை உதவி மையத்திற்கு நேரில் சென்றும், வீட்டில் இருந்தே ஆன்-லைன் மூலமும் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு விண்ணப்பதாரர் மாணவர் சேர்க்கை உதவி மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும். பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கு விண்ணப்பக் கட்டணமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.250-ம், இதர வகுப்பினர் ரூ.500-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.
 விண்ணப்பக் கட்டணத்தை ஆன்-லைனில் மட்டுமே செலுத்த முடியும்.
பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கு விண்ணப்பத்தை பதிவு செய்ய உதவி மையத்திற்குச் செல்வோர் செல்லிடபேசி எண், மின்னஞ்சல் முகவரி, 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்று, பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை எண், 8 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த பள்ளிகளின் விபரம், சாதிச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை எண், பெற்றோரின் ஆண்டு வருமானம், முதல் பட்டதாரிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்காக டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் விபரங்களை கொண்டு செல்ல வேண்டும்.
இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்யும் போது, சம்மந்தப்பட்ட மாணவரின் செல்லிடபேசியில் வழங்கப்படும் கடவுச் சொல்லை பயன்படுத்தியே விண்ணப்ப பதிவை தொடர முடியும் என்பதால், ஆன்-லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வரும் மாணவ, மாணவிகள் உதவி மையத்திற்கு தங்களது செல்லிடபேசியை  தவறாமல் கொண்டு செல்ல வேண்டும். 
மின்னஞ்சல் இல்லாத மாணவர்களுக்கு உதவி மையத்தில் புதிய மின்னஞ்சல் முகவரி உருவாக்கித் தரப்படும். மாணவர் சேர்க்கை உதவி மையத்தில் மாணவ, மாணவிகளுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com