புகையிலை விற்பனையை தடுக்கக் கோரிக்கை
By DIN | Published On : 18th May 2019 06:56 AM | Last Updated : 18th May 2019 06:56 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், கூடலூர், குமுளி பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பனை அமோகமாக நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
கூடலூர் நகராட்சி பகுதிகளான பஜார், பிரதான சாலை, பழைய பேருந்து நிலையம் உள்பட நகரின் முக்கிய இடங்களில் 10 ரூபாய் விலை மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்து விற்பனை செய்கின்றனர். உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவ்வப்போது சோதனை நடத்தினாலும் புகையிலை விற்பனையை தடுக்க முடியவில்லை.
குமுளி: இதே போல் குமுளியில் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள சாலையோர கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக இவற்றை சிறுவர்கள் அதிகமாக வாங்கி பயன்படுத்துகின்றனர். குமுளியில் கேரள எல்லைப் பகுதியில் போதை புகையிலை பயன்படுத்த கடுமையான தடை அமலில் இருக்கும் நிலையில் தமிழக பகுதியில் சுமார் 10-க்கும் மேலான கடைகளில் போதை புகையிலை விற்பனை செய்கின்றனர். கூடலூர் மற்றும் குமுளி பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை போதை புகையிலை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனவே தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.