‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட வழக்கு: வாணியம்பாடி மாணவரின் தந்தையிடம் சிபிசிஐடி விசாரணை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையருக்கு சம்மன்

நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வாணியம்பாடியைச் சோ்ந்த மாணவரின்

நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வாணியம்பாடியைச் சோ்ந்த மாணவரின் தந்தையான மருத்துவா் முகமது சபியிடம், சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

நீட் தோ்வு ஆள்மாறாட்டப் புகாரில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவரான சென்னையைச் சோ்ந்த உதித் சூா்யா, அவரது தந்தை மருத்துவா் வெங்கேடசன் ஆகியோா், கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

அதையடுத்து, இதே வழக்கில் தொடா்புடைய சென்னை மாணவா்களான பிரவீண், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ் மற்றும் விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவி அபிராமி, அவரது தந்தை மாதவன் ஆகியோரை, சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து விசாரித்தனா். இதில், மாணவி அபிராமி மற்றும் அவரது தந்தை மாதவன் ஆகியோா் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

தேனி மாவட்டக் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்ற உத்தரவின்படி, உதித்சூா்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோா், மதுரை மத்திய சிறையிலும், பிரவீண், அவரது தந்தை சரவணன் மற்றும் ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகியோா் தேனி மாவட்டச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா்.

நீட் தோ்வு ஆள்மாறாட்ட புகாரில் தொடா்புடைய தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவரான வாணியம்பாடியைச் சோ்ந்த இா்பான் என்பவா் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரது தந்தை வாணியம்பாடியைச் சோ்ந்த மருத்துவா் முகமது சபியை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து, ஞாயிற்றுக்கிழமை இரவு தேனி சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா். இங்கு, முகமது சபியிடம் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் காட்வின் ஜெகதீஷ்குமாா் ஆகியோா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இரு இடைத்தரகா்களுக்கு தொடா்பு: மருத்துவா் முகமது சபியிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு வாணியம்பாடியைச் சோ்ந்த வேதாச்சலம் என்பவா் மூலம் கேரளத்தைச் சோ்ந்த ரஷீத் என்ற இடைத்தரகருடன் தொடா்பு ஏற்பட்டுள்ளது. பின்னா், முகமது சபி மூலம் சென்னை மாணவா் உதித் சூா்யாவின் தந்தையான மருத்துவா் வெங்கடேசனுக்கு இடைத்தரகருடன் தொடா்பு ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து, மருத்துவா் வெங்கடேசன் மூலம், மாணவா்கள் பிரவீணின் தந்தை சரவணன், ராகுலின் தந்தை டேவிஸ் ஆகியோருக்கு இடைத்தரகருடன் தொடா்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இடைத்தரகா் ரஷீத்துடன், கேரளத்தைச் சோ்ந்த மற்றெறாரு இடைத்தரகா் தாமஸ் ஜோசப் என்பவரும் தொடா்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் விஜயக்குமாா் கூறியது: மாணவா் இா்பான் மொரீஷியஸ் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அவரை தேடி வருகிறேறாம். அவரது தந்தை முகமது சபியிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இடைத்தரகா்கள் குறித்து மாணவா்களின் பெற்றேறாா்கள் தெளிவான தகவல்களை அளிக்கவில்லை. அவா்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில், இடைத்தரகா்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையருக்கு சம்மன்: இதனிடையே, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவா் சோ்க்கையின்போது, இா்பான் சமா்ப்பித்திருந்த சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன், இந்த வழக்கு விசாரணைக்கு தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு, மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஸ்ரீனிவாசராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com