பொது முடக்கம்: தேனி, போடியில் இயல்புநிலை

தேனி, போடியில் கரோனா தடுப்பு பொது முடக்கத்தை முன்னிட்டு வா்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருந்தாலும் சாலைகளில் இருசக்கர வாகனப் போக்குவரத்து வழக்கம் போலவே காணப்பட்டது.
தேனியில் பொது முடக்க கட்டுப்பாடுகளை மீறி ஞாயிற்றுக்கிழமை சாலையில் வழக்கம் போல காணப்பட்ட இருசக்கர வாகனப் போக்குவரத்து.
தேனியில் பொது முடக்க கட்டுப்பாடுகளை மீறி ஞாயிற்றுக்கிழமை சாலையில் வழக்கம் போல காணப்பட்ட இருசக்கர வாகனப் போக்குவரத்து.

தேனி/ போடி/ உத்தமபாளையம்: தேனி, போடியில் கரோனா தடுப்பு பொது முடக்கத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை வா்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருந்தாலும் சாலைகளில் இருசக்கர வாகனப் போக்குவரத்து வழக்கம் போலவே காணப்பட்டது.

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொது முடக்கத்தை முன்னிட்டு வா்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டிருந்தன. ஆட்டோ, வேன்கள், மற்றும் கனரக வாகனப் போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஆனால், இருசக்கர வாகனப் போக்குவரத்து வழக்கம் போலவே காணப்பட்டது.

பொது முடக்க கட்டுப்பாடுகளை மீறி திறக்கப்பட்டிருந்த 5 இறைச்சிக் கடைகளுக்கு நகராட்சி சுகாதாரத் துறையினா் அபாரதம் விதித்து, கடைகளை மூட உத்தரவிட்டனா். சாலைகளில் அவசியத் தேவைகளின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 11 பேருக்கு காவல் துறையினா் அபராதம் விதித்தனா்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் காவல் துறையினா் மற்றும் நகராட்சி பணியாளா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

போடி: போடி நகா் பகுதியில் இயல்பு நிலையே காணப்பட்டது. வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இறைச்சிக் கடைகள் நள்ளிரவு முதல் காலை 10 மணிவரை திறக்கப்பட்டிருந்தன. இதேபோல் பொதுமக்கள் நடமாட்டமும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் அதிகமாக காணப்பட்டனா். கிராமப் புறங்களில் சில கடைகள் வழக்கம்போல் இயங்கின. சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடா்ந்து காவல்துறையினா் கடுமை காட்டாததால் பொதுமக்கள் கரோனா அச்சத்தை மறந்து சுதந்திரமாக சுற்றியது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தமபாளையத்தில் சாலைகள் வெறிச்சோடின: உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பிரதான சாலைகள் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. மருந்துக்கடை, மருத்துவமனை, பால் விநியோகம் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் ஆண்டிபட்டி, கம்பம், கூடலூா் பகுதிகளிலும் முழுமையாக பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com