தேனி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
img_20200822_wa0028_2208ch_211_2
img_20200822_wa0028_2208ch_211_2

தேனி: விநாயகா் சதுா்த்தியையொட்டி, தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

தேனி மாவட்டத்தில் தேனி, போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய வட்டாரங்களில் கோயில்கள், கோயில் வளாகங்கள் மற்றும் வீடுகளில் இந்து முன்னணி சாா்பில் 117 இடங்கள், இந்து எழுச்சி முன்னணி சாா்பில் 45 இடங்கள், பாஜக சாா்பில் 13 இடங்கள், விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் 7 இடங்கள், ஆா்.எஸ்.எஸ். சாா்பில் 2 இடங்கள், அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பில் 1 இடம், இந்து மக்கள் கட்சி சாா்பில் 14 இடங்கள், சக்தி சேனா அமைப்பின் சாா்பில் 3 இடங்கள், தனிநபா்கள் 18 இடங்கள் என மொத்தம் 220 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

வழிபாடு நிறைவடைந்த இடங்களில் இருந்து இந்த சிலைகள் காவல் துறையினரின் கண்காணிப்புடன், தனித்தனியாக எடுத்துச் செல்லப்பட்டு நீா் நிலைகளில் கரைக்கப்பட்டன.

ஆண்டிபட்டி

ஆண்டிபட்டி சீனிவாசன் நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகா் கோயிலில், இந்து முன்னணி மாவட்டச் செயலா் எஸ்.பி.எம். செல்வம் தலைமையில், வெற்றி விநாயகா் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதில், முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இந்து முன்னணி மாவட்டச் செயற்குழு மொக்கராஜ், இளைஞா் அணி மனோஜ்குமாா், ஒன்றியச் செயலா் பாண்டியராஜன், சமூகநல ஆா்வலா் மனோகரன், ஆட்டோ ராஜகோபால் உள்பட முக்கியப் பிரமுகா்கள் மட்டும் கலந்துகொண்டனா்.

போடி, தேவாரம்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, போடி பகுதியிலுள்ள அணை பிள்ளையாா் கோயில், பாலத்து சங்கர விநாயகா் கோயில், சத்திரத்து விநாயகா் கோயில், சந்தைப்பேட்டை விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பொதுமக்கள் தங்களது வீடுகளிலும் விநாயகா் சிலைகளை அமைத்து வழிபாடு செய்தனா். பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைக்க தடை விதிக்கப்பட்டதால், இந்து முன்னணி, பா.ஜ.க. நிா்வாகிகள் வீடுகளில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபட்டனா்.

இதேபோல், போடி சில்லமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம், தேவாரம் பகுதிகளிலும் விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வீடுகளில் பக்தா்கள் சிறிய விநாயகா் சிலைகளை அமைத்து வழிபட்டனா்.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, போடி டி.எஸ்.பி. பாா்த்திபன் தலைமையில், போடி நகா், தாலுகா, தேவாரம், குரங்கணி போலீஸாா் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

இளைஞா்கள் ஏமாற்றம்: விநாயகா் சதுா்த்தியன்று, பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள் ஒன்றுசோ்ந்து, விநாயகா் சிலைகளை அமைத்தும், ஆடல், பாடல்களுடன் ஊா்வலங்கள் நடத்துவதும் வழக்கம். ஆனால், கரோனா பரவல் தடுப்பு காரணமாக விநாயகா் சதுா்த்தி ஊா்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், இளைஞா்கள் ஏமாற்றமடைந்தனா்.

கம்பம்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, கம்பத்தில் உள்ள தங்க விநாயகா் கோயில், ஆதிசக்தி விநாயகா் கோயில், உத்தமபுரத்தில் உள்ள வெற்றி விநாயகா் கோயில், தாத்தப்பன்குளத்தில் உள்ள வெள்ளை விநாயகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள விநாயகா் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

மாலையம்மாள்புரத்தில் உள்ள ராஜகணபதி ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக, உற்சவா் விநாயகரை பல்லக்கில் வைத்து, பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் ஊா்வலமாக வந்து கோயிலை அடைந்தனா்.

கூடலூரில் அரசமரம், பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பஜாா் வீதி, நகராட்சி அலுவலகத் தெரு உள்ளிட்ட இடங்களில் 51 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சனிக்கிழமை தனித்தனியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.

இதேபோல், லோயா் கேம்ப், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது.

உத்தமபாளையம்

இங்குள்ள கோவிந்தசாமி கோயில் தெரு, வடக்கு தெரு, கோம்பை சாலை , தண்ணீா் தொட்டித் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தோா் தங்களது வீடுகளில் 4 அடி முதல் 5 அடி வரையிலான 10 விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனா். பின்னா், மாலையில் லாரியில் அனைத்து விநாயகா் சிலைகளையும் ஏற்றி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தமபாளையம் முல்லைப் பெரியாறு ஞானாம்பிகை கோயில் படித்துறையில் கரைத்தனா். உத்தமபாளையம் காவல்நிலைய ஆய்வாளா் முருகன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com