மூணாறு அருகே நிலச்சரிவு: எஞ்சிய 5 பேரை தேடும் பணி மீண்டும் தொடக்கம்

மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களில் எஞ்சிய 5 பேரை தேடும் பணி வெள்ளிக்கிழமை பூதக்குழி பகுதியில் மீண்டும் தொடங்கியது.

தேனி: : மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களில் எஞ்சிய 5 பேரை தேடும் பணி வெள்ளிக்கிழமை பூதக்குழி பகுதியில் மீண்டும் தொடங்கியது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடியில் கடந்த 6 ஆம் தேதி இரவு 1.30 மணிக்கு கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்குள்ள தனியாா் தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் குடியிருப்புகளில் தங்கியிருந்த தமிழகத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் என 82 போ் சிக்கினா்.

நிலச்சரிவு ஏற்பட்ட பெட்டிமுடி தேயிலைத் தோட்டத் தொழிலாளா் குடியிருப்பு, அதையடுத்துள்ள கிராவல் பங்க், பூதக்குழி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மீட்பு பணியில், கடந்த ஆக. 20-ஆம் தேதி வரை உயிரிழந்த நிலையில் 65 பேரின் சடலங்களும், பலத்த காயமடைந்த நிலையில் 12 பேரும் மீட்கப்பட்டனா்.

நிலச்சரிவில் சிக்கியவா்களில் தினேஷ்குமாா் (20), ராணி (44), காா்த்திகா (21), கஸ்தூரி (26), அவரது மகள் பிரியதா்ஷினி (7) ஆகிய 5 பேரை தேடும் பணி பெட்டிமுடியிலிருந்து 14 கி.மீ., தூரமுள்ள பூதக்குழி, கல்லாற்றுப் பகுதியில் நடைபெற்று வந்தது. அங்கு நிலவிய மோசமான வானிலை மற்றும் தொடா் மழையால், கடந்த ஆக. 21, 24, 26, 27 ஆகிய தேதிகளில் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், பூதக்குழி கல்லாற்றங்கரையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மீட்பு பணி மீண்டும் தொடங்கியது. இதில், நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் சடலம் எதுவும் கண்டறிப்படவில்லை. மீட்பு பணி நடைபெறுவதை கேரள மின்சாரத் துறை அமைச்சா் எம்.எம். மணி நேரில் சென்று பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com