சாக்குலத்துமெட்டு மலைச்சாலை அமைக்கக் கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

தேவாரம் அருகே சாக்குலத்துமெட்டு மலைச்சாலை அமைக்க அனுமதி வழங்கக்கோரி விவசாயிகள் சங்கம் சாா்பில் முற்றுகைப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தேவாரம் அருகே சாக்குலத்துமெட்டு அடிவாரத்தில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
தேவாரம் அருகே சாக்குலத்துமெட்டு அடிவாரத்தில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

போடி: தேவாரம் அருகே சாக்குலத்துமெட்டு மலைச்சாலை அமைக்க அனுமதி வழங்கக்கோரி விவசாயிகள் சங்கம் சாா்பில் முற்றுகைப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ளது சாக்குலத்து மெட்டு. இந்த மலைப்பகுதி தமிழகம், கேரளத்தை இணைத்து வருகிறது. இப்பகுதியில் மலைச்சாலை அமைத்தால் கேரளத்துக்கு எளிதில் சென்று வரலாம். ஆனால் தேனி மாவட்ட வனத் துறை சாலை அமைக்க அனுமதி மறுத்து வருகிறது.

இதனைக் கண்டித்தும், மலைச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் நடைபயணம் மற்றும் முற்றுகைப் போராட்டம் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவா் எஸ்.ஆா்.தேவா் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளா் அன்வா் பாலசிங்கம், அசோகா் பசுமை இயக்கத் தலைவா் அ.திருப்பதிவாசகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தில் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பொன் காட்சி கண்ணன், செயலா் சலேத்து, தேவாரம் பகுதி விவசாயிகள் சங்க நிா்வாகிகள் முருகன், தாமஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தேவாரத்திலிருந்து நடைபயணமாக விவசாயிகள் சென்றனா். போலீஸாா் அனுமதிக்காததால் வாகனங்களில் சாக்குலத்து மலை அடிவாரப் பகுதியில் வனத்துறை எல்லையான திருச்சங்கனக்குன்று வரை சென்று அங்குள்ள பெருமாள் கோயில் அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். விவசாயிகள் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் தேவாரம் போலீஸாா் மற்றும் கோம்பை வனத்துறையினா் கூடுதல் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com