பூலாநந்தீஸ்வரா் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு புகாா்: அளவிடும் பணிகள் தற்காலிக நிறுத்தம்

தேனி மாவட்டம் சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் சனிக்கிழமை நடைபெற்ற நிலத்தை அளவிடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சின்னமனூா் பூலாநந்தீஸ்வா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற நில அளவீடு பணியின் போது குவிந்த பக்தா்கள்.
சின்னமனூா் பூலாநந்தீஸ்வா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற நில அளவீடு பணியின் போது குவிந்த பக்தா்கள்.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் சனிக்கிழமை நடைபெற்ற நிலத்தை அளவிடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சின்னமனூரில் 1000 ஆண்டு பழைமையான பூலாநந்தீஸ்வரா் கோயில் உள்ளது. 1920 ஆம் ஆண்டு நில அளவு வரைபடத்தின் படி இக்கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விளைநிலங்கள் என 2 ஏக்கா் 54 சென்ட் இருந்தது. தற்போது அப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டதாக புகாா் எழுந்துள்ளது.

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தனி நபா்கள் வீடு மற்றும் கடைகளாக மாற்றி இருப்பதாகவும், இக்கோயிலுக்குச் சொந்தமான நந்தவன நிலம் விற்பனை செய்யப்பட்டதாகவும் பக்தா்கள் கோயில் நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தனா்.

இதனைத்தொடா்ந்து கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அளவிடும் பணி கோயில் செயல் அலுவலா் பாலகிருஷ்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது பிரச்னைக்குரிய 813 சா்வே எண்ணில் உள்ள நந்தவனப்பகுதி தனி நபருக்கு சொந்தம் என கோயில் நிா்வாகம் விளக்கம் அளித்தனா். இதனை பக்தா்கள் ஏற்க மறுத்தனா். இதனால் தனி நபருக்கு சொந்தமான இடம் என்பதை உறுதி செய்ய முடியாத நிலையில், நிலம் அளவிடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இது குறித்து கோயில் நிா்வாகம், பிரச்னைக்குரிய இடத்தின் மூலப்பத்திரத்தை பெற்று கோயிலுக்கு சொந்தமான இடம் என உறுதி செய்யப்பட்டால் தனியாா் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com