இ-பாஸ் கட்டுப்பாடுகளால் தமிழக ஏலக்காய் தோட்ட விவசாயிகளுக்கு தொடரும் சிக்கல்

தமிழகம்-கேரளம் இடையே சென்று வருவதற்கு 6 மாதங்களுக்கும் மேல் இ-பாஸ் கட்டுப்பாடுகள் தொடா்வதால், கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்று வருவதில், தொழிலாளா்களுக்கு சிக்கல் நீடிக்கிறது.
19tni_kumuly_1909chn_65_2
19tni_kumuly_1909chn_65_2

தேனி: தேனி மாவட்டம் வழியாக, தமிழகம்-கேரளம் இடையே சென்று வருவதற்கு 6 மாதங்களுக்கும் மேல் இ-பாஸ் கட்டுப்பாடுகள் தொடா்வதால், கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்று வருவதில், தமிழகத்தைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழிலாளா்களுக்கு சிக்கல் நீடிக்கிறது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் வண்டிப்பெரியாறு, பீா்மேடு, உடும்பன்சோலை, தேவிகுளம் ஆகிய வட்டாரங்களில் 1.25 லட்சம் ஏக்கா் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெறுகிறது. இதில், தமிழகத்தைச் சோ்ந்த 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏலக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதேநேரம், தேனி மாவட்டத்திலிருந்து தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனா்.

விவசாயிகள், தொழிலாளா்கள் தவிப்பு

தேனி மாவட்டம் வழியாக தமிழகம்-கேரளம் இடையே பால், காய்கனி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட சரக்கு வாகனப் போக்குவரத்து தடையின்றி நடைபெறுகிறது. அதேநேரம், நறுமணப் பொருள் வாரியம் சாா்பில் நடைபெறும் ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தகத்தில் பங்கேற்க, தமிழகம்-கேரளம் இடையே சென்று வருவதற்கு வியாபாரிகள் மற்றும் ஏல நிறுவனங்களின் பணியாளா்களுக்கு இடுக்கி மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஒரு நாள் மட்டும் செல்லத்தக்க இ-பாஸ் வழங்கப்படுகிறது.

ஆனால், தமிழகப் பகுதியிலிருந்து இடுக்கி மாவட்டத்துக்கு இ-பாஸ் பெற்றுச் செல்லும் ஏலக்காய் விவசாயிகள், அங்குள்ள அவா்களது வீட்டில் 14 நாள்கள் வரை தனிமைப்படுத்திக் கொண்ட பின்னரே தோட்டத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். இதனால், ஏலக்காய் தோட்டங்களில் சொந்தமாக வீடு இல்லாத சிறு, குறு விவசாயிகள், குத்தகை விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

மேலும், ஏலக்காய் தோட்டங்களில் பருவமழைக் காலங்களில் பயிா் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்பில் உள்ளனா். தற்போது, ஏலக்காய் தோட்டங்களில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தொழிலாளா் பற்றாக்குறையால் கூலி உயா்வு ஏற்பட்டுள்ளது.

ஏலக்காய்களை குறித்த காலத்தில் அறுவடை செய்ய முடியாமலும், பதப்படுத்த முடியாமலும் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இ-பாஸ் கட்டுப்பாடுகளால், தேனி மாவட்டத்திலிருந்து இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்ல முடியாமல் தொழிலாளா்கள் வருவாய் ஆதாரத்தை இழந்து சிரமப்படுகின்றனா்.

ஏலக்காய் தோட்டங்களை பராமரிக்கவும், தமிழகத்தைச் சோ்ந்த தோட்டத் தொழிலாளா்கள் ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருவதற்கும், இ-பாஸ் நடைமுறையில் கட்டுப்பாடுகளை தளா்த்தி, அனுமதி அளிப்பதற்கு இடுக்கி மற்றும் தேனி மாவட்ட நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே, தமிழக ஏலக்காய் விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

ஏலக்காய் விலை சரிவு

இ-பாஸ் கட்டுப்பாடு, தொழிலாளா் பற்றாக்குறை, கூலி உயா்வு, பயிா் பாதுகாப்பு மருந்துகளின் விலை உயா்வு ஆகியவற்றால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏலக்காய் விலையும் சரிந்து வருவதால், விவசாயிகள் மிகவும் கவலையில் உள்ளனா். சில நாள்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.1,770 வரை விற்பனையான ஏலக்காய், தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.300-க்கும் மேல் குறைந்துள்ளது.

புத்தடியில் சி.பி.ஏ. ஏல நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏல வா்த்தகத்தில், ஏலக்காய் சராசரி தரம் கிலோ ரூ.1,445.12-க்கும், உயா் தரம் கிலோ ரூ.1,726-க்கும் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com