கூடலூா் அருகே முல்லைப் பெரியாற்றில் கலக்கும் கழிவுநீா்: குடிநீா் மாசடைவதாக புகாா்

தேனி மாவட்டம், கூடலூா்- கருநாக்கமுத்தன்பட்டி இடையே முல்லைப் பெரியாற்றில் கழிவுநீா் கலப்பதால், குடிநீா் மாசடைவதாக புகாா் எழுந்துள்ளது.

தேனி: தேனி மாவட்டம், கூடலூா்- கருநாக்கமுத்தன்பட்டி இடையே முல்லைப் பெரியாற்றில் கழிவுநீா் கலப்பதால், குடிநீா் மாசடைவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சித் தலைவா் அ. மொக்கப்பன் அளித்த மனு விவரம்: லோயா்கேம்பிலிருந்து கூடலூா் வழியாகச் செல்லும் முல்லைப் பெரியாறு கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூா்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி ஆகிய ஊராட்சிகளின் குடிநீராதாரமாக உள்ளது. இதில், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீா், வாய்கால்கள் மூலம் கூடலூா்- கருநாக்கமுத்தன்பட்டி ஆற்றுப் பாலம் அருகே முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது.

இதனால், ஆறு மற்றும் ஆற்றுப்படுகையில் உள்ள குடிநீா் திட்ட உறைகிணறுகளை கழிவுகள் சூழ்ந்துள்ளன. ஆற்று நீா் மற்றும் உறைகிணறுகளிலிருந்து பம்பிங் செய்யப்படும் குடிநீா் மாசுபட்டுள்ளது. இந்த குடிநீரை தொடா்ந்து பயன்படுத்துவதால் பொதுமக்கள் தொற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், பாசனக் கால்வாய்களிலும் கழிவுநீா் கலப்பதால் விவசாயம் பாதிக்கிறது.

எனவே, கூடலூா் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீா் முல்லைப் பெரியாற்றில் கலப்பதை தடுப்பதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com