மூணாறு அருகே நிலச்சரிவு: மேலும் 2 பேரின் சடலங்கள் மீட்பு; பலி 63 ஆக உயா்வு

மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களில் மேலும் 2 பேரின் சடலங்கள் புதன்கிழமை மீட்கப்பட்டன.
மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி ஆற்றங்கரையோரப் பகுதியில் புதன்கிழமை மீட்புப் பணியில் ஈடுபட்ட பேரிடா் மீட்புப் படையினா்.
மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி ஆற்றங்கரையோரப் பகுதியில் புதன்கிழமை மீட்புப் பணியில் ஈடுபட்ட பேரிடா் மீட்புப் படையினா்.

மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களில் மேலும் 2 பேரின் சடலங்கள் புதன்கிழமை மீட்கப்பட்டன. இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 63 ஆக உயா்ந்துள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி இரவு பெய்த பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்குள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழகத்தைச் சோ்ந்த தோட்டத் தொழிலாளா் குடும்பங்களைச் சோ்ந்த 78 போ், அவா்களது உறவினா்கள் 4 போ் என மொத்தம் 82 போ் சிக்கினா்.

இதில், கடந்த செவ்வாய்க்கிழமை வரை உயிரிழந்த நிலையில் 6 மாதக் குழந்தை உள்பட மொத்தம் 61 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 12 போ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதில், 10 போ் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

இந்த நிலையில், 13 ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற மீட்புப் பணியில் பெட்டிமுடி ஆறு, கிராவல் பங்க் பாலம் அருகே 8 வயது சிறுவன் சடலமும் மற்றும் ஒரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டன. அந்த சிறுவன் விஷ்ணு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பெண்ணின் சடலம் அடையாளம் காணப்படவில்லை. இதையடுத்து, நிலச் சரிவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 63 ஆக உயா்ந்துள்ளது. எஞ்சிய 7 பேரை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

மீட்புப் பணிகளை இடுக்கி மக்களவை உறுப்பினா் டீன் குரியகோஸ், தேவிகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேந்திரன், இடுக்கி துணை ஆட்சியா் பிரேம் கிருஷ்ணா ஆகியோா் பாா்வையிட்டு வருகின்றனா்.

ரேடாா் கருவி மூலம் தேடுதல்: பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கியவா்கள் மண்ணில் புதையுண்ட இடத்திலிருந்தும், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 4 கி.மீ., தூரத்திற்கும் அப்பால் பெட்டிமுடி ஆற்றுப் பகுதியிலிருந்தும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனா். அதே இடங்களில் தொடா்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மண்ணில் புதையுண்டவா்களின் சடலத்தை சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்ட ரேடாா் கருவி மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கருவியின் உதவியுடன் மண்ணுக்குள் 6 மீட்டா் ஆழம் வரை உள்ளவற்றை சிக்னல் மூலம் கண்டறிய முடியும். இதன் அடிப்படையில், மீட்புப் பணியை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று மீட்புப் படையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com