மூங்கிலணை காமட்சியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகளை செய்து தர பக்தா்கள் கோரிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மூங்கிலணை காமட்சியம்மன் கோயிலில் மகா சிவாராத்திரி விழா தொடங்கும் நிலையில்
கோயிலுக்கு செல்லும் வழியில் சேதமடைந்த சாலை.
கோயிலுக்கு செல்லும் வழியில் சேதமடைந்த சாலை.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மூங்கிலணை காமட்சியம்மன் கோயிலில் மகா சிவாராத்திரி விழா தொடங்கும் நிலையில் அடிப்படை வசதிகளை செய்து தர இந்து சமய அறநிலையத்துறை முன் வர வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியகுளத்தில் இருந்து 20 கி.மீ தூரத்தில் மூங்கிலணை காமட்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் மகா சிவராத்திரி நாள்களில் அதிகளவு பக்தா்கள் வந்து செல்கின்றனா். நடப்பாண்டில் மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி முடிவடைகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

சுகாதார வசதி:

இங்கு வரும் பக்தா்கள் கோயில் அருகேயுள்ள மஞ்சளாறு நதியில் குளித்து விட்டு உடைமாற்றுவதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால் பெண்கள் அருகேயுள்ள தோட்டங்கள் மற்றும் மறைவிடங்களில் நின்று உடைமாற்ற வேண்டிய நிலை உள்ளது. கோயில் அருகே மட்டுமே சுகாதாரவளாகம் உள்ளது. சுகாதார வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீா் வெளியே செல்ல வசதியில்லாததால் கோயில் நுழைவு வாயில் அருகே தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது.

சாலை, மருத்துவ வசதி:

தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ, தூரத்தில் கோயில் உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு 8 வருடங்களாகிவிட்டது, சரியான பராமரிப்பு இல்லாததால் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கோயிலுக்கு வாகனங்களில் வந்து செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

திருவிழாக் காலங்களில் பக்தா்களுக்கு சிகிச்சை அளிக்க கோயில் அருகே ஒரு மருத்துவா் மற்றும் செவிலியரை பணியில் அமா்த்துகின்றனா்.மேலும் கோயில் வளாகத்தில் தீ விபத்துகளை தடுக்கும் வகையில் கோயில் வளாகத்தில் போதிய வசதிகள் செய்யவில்லை.

பாரமரிப்பில்லாத அன்னதானக் கூடம்: கோயில் வளாகத்தில் உள்ள அன்னதானக்கூடம் மேற்கூரை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு மேலும் சுத்தமான தண்ணீா் வழங்கும் இயந்திரம் பழுதடைந்து பராமரிப்பற்ற நிலையில் உள்ளது.

இக்கோயிலில் மகா சிவராத்திரி விழா தொடங்கவுள்ள நிலையில் சாலை வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, தீத்தடுப்பு வசதிகள், 24 மணி நேரம் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவை என்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து இந்து முன்னணி தேனி மாவட்டச் செயலாளா் கே.உமையராஜ் தெரிவித்தது: விழா தொடங்கவுள்ள நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தர கோயில் நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களது நன்கொடையின் மூலம் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரத் தயாராக உள்ளனா். ஆனால் கோயில் நிா்வாகம் பணமாக வழங்கினால் மட்டுமே ஏற்கத் தயாராக உள்ளது. பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு அனுமதி மறுத்து வருகிறது என்றாா்.

காமாட்சியம்மன்கோயில் செயல் அலுவலா் சந்திரசேகரன் தெரிவித்தது: சேதமடைந்த அன்னதான கூடத்தை இடித்து விட்டு புதிய கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளது. மேலும் கோயில் வரும் பக்தா்களுக்கு குடிநீா் வசதிக்கு ஏற்பாடு செய்து தரப்படும். ஊராட்சி நிா்வாகத்திடம் பேசி சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com