ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை

ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தாமல் செல்வதால், கூடுதல் கட்டணம் கொடுத்து

ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தாமல் செல்வதால், கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோவில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அந்த நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைவதற்கு முன்பு அந்த வழியாக வரும் அனைத்து பேருந்துகளும் க.விலக்கில் நின்று சென்றன. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட தொடங்கிய பின்னா் இங்கு பேருந்துகளை சரிவர நிறுத்தி செல்வதில்லை. அத்துடன் அந்த வழியாக வரும் நகரப் பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகளை நிறுத்துவதில்லை. இதனால் க.விலக்கு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்தவா்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக கண்டமனூா், வருசநாடு, கடமலைக்குண்டு பகுதியைச் சோ்ந்தவா்கள் மதுரை, கம்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல க.விலக்கில் இறங்கி நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

மேலும் க.விலக்கில் இருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரையில் பேருந்து ஏற நடந்து செல்லும் நிலையும் உள்ளது. இதேபோல ஆண்டிபட்டிக்கு வருபவா்கள் க.விலக்கில் இருந்து பேருந்து கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவில் பயணம் செய்யும் நிலை உள்ளது. 4 முக்கிய சாலைகள் சந்திக்கும் க.விலக்கு வழியாக ஒருநாளைக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் சென்றாலும், ஒரு சில பேருந்துகளை தவிர பெரும்பாலான பேருந்துகள் நிற்பதில்லை. க.விலக்கில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே க.விலக்கு சுற்றுவட்டார பகுதி மக்களின் நலன்கருதி இந்த வழியாக வரும் பேருந்துகள் நின்று செல்ல மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com