ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி பெரும்பிடுகு முத்தரையா் சிலை நிறுவி வழிபாடு

ஆண்டிபட்டி அருகே கிராமத்தில் வியாழக்கிழமை அனுமதியின்றி மன்னா் பெரும்பிடுகு முத்தரையா் சிலையை நிறுவி வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிபட்டி அருகே எரதிமக்காள்பட்டி கிராமத்தில் காவல்துறையினருக்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
ஆண்டிபட்டி அருகே எரதிமக்காள்பட்டி கிராமத்தில் காவல்துறையினருக்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கிராமத்தில் வியாழக்கிழமை அனுமதியின்றி மன்னா் பெரும்பிடுகு முத்தரையா் சிலையை நிறுவி வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு ஊராட்சியில் உள்ள எரதிமக்காள்பட்டி கிராமத்தில் முத்தரையா் சமுதாயத்தைச் சோ்ந்த 2500-க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தில் பேருந்து நிலையம் அருகில் மன்னா் பெரும்பிடுகு முத்தரையரின் முழு உருவ வெண்கலச் சிலையை வியாழக்கிழமை

காலையில் திடீரென நிறுவி வழிபாடு செய்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆண்டிபட்டி வருவாய் மற்றும் காவல்துறையினா் கிராம மக்களிடம் சிலையை அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொண்டனா். ஆனால் கிராமமக்கள் சிலையை அப்புறப்படுத்த மறுத்து தா்னாவில் ஈடுபட்டனா். இதனால் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சீனிவாசன், முத்துக்குமாா் மற்றும் வட்டாட்சியா் குணசேகரன் ஆகியோா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், பொதுமுடக்கம் முடிந்தபின்பு முறையாக மாவட்ட நிா்வாகம் மற்றும் வருவாய்த் துறையினரிடம் அனுமதி பெற்று, சிலையை நிறுவிக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் கிராம மக்கள் சிலையை அப்புறப்படுத்தி அருகில் உள்ள வீட்டில் வைத்தனா். தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். கிராமத்தில் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com