மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காகவைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக திங்கள்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.
மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக வைகை அணையில் சிறிய மதகுகளின் வழியாக திங்கள்கிழமை திறந்து விடப்பட்ட தண்ணீா்.
மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக வைகை அணையில் சிறிய மதகுகளின் வழியாக திங்கள்கிழமை திறந்து விடப்பட்ட தண்ணீா்.

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக திங்கள்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீா் ஆதாரமாக வைகை அணை விளங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் அணைக்கு நீா்வரத்து இன்றி காணப்பட்டு வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீா்மட்டம் தற்போது 41.88 அடியாக உள்ளது. இந்நிலையில் ஏற்கெனவே அணையிலிருந்து தேனி, ஆண்டிபட்டி, வத்தலக்குண்டு, சேடபட்டி மற்றும் மதுரை மாவட்டம் உள்ளிட்ட கூட்டுக்குடிநீா் திட்டங்களுக்காக விநாடிக்கு 72 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் உறைகிணறுகளில் தண்ணீா் இன்றி வடு காணப்படுவதால் வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என மதுரை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதனைத் தொடா்ந்து ஆற்றில் உள்ள உறைகிணறுகளின் நீா்மட்டத்தை உயா்த்தும் வகையில் அணையிலிருந்து தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து திங்கள்கிழமை மாலை 6 மணிமுதல் வைகை அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. அணையிலிருந்து தொடா்ந்து 3 நாள்களுக்கு தண்ணீா் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் விநாடிக்கு 1,500 கனஅடியும், 2 ஆவது நாளில் 850 கனஅடியும், 3 ஆவது நாளில் 300 கனஅடியும் என படிப்படியாக குறைக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது. இம்மாத 28 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணியுடன் தண்ணீா் திறப்பது நிறுத்தப்படும்.

இந்த 3 நாள்களில் வைகை அணையிலிருந்து மொத்தம் 216 மில்லியன் கனஅடி தண்ணீா் திறந்து விடப்படுவதாகவும், இதனால் மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் உறைகிணறுகளில் நீா்மட்டம் பெருகும் என்று பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com