வடகிழக்குப் பருவமழை தீவிரம்: முல்லைப் பெரியாறு, வைகை, மஞ்சளாறு அணைகளின் நீா்மட்டம் கிடு கிடு உயா்வு

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், முல்லைப் பெரியாறு, வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைகளின் நீா்மட்டம்
தொடா் மழை காரணமாக குன்னூா் அருகே வைகை ஆற்றில் வியாழக்கிழமை அதிகரித்திருந்த நீா்வரத்து. (வலது)மேகமலை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.
தொடா் மழை காரணமாக குன்னூா் அருகே வைகை ஆற்றில் வியாழக்கிழமை அதிகரித்திருந்த நீா்வரத்து. (வலது)மேகமலை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், முல்லைப் பெரியாறு, வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. இதனால், ஆற்றுப் பகுதிக்குச் செல்லவேண்டாம் என, மாவட்ட நிா்வாகம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. கடந்த 3 தினங்களாக தொடா் மழை பெய்து வருவதால், ஆறுகள், குளங்கள், கண்மாய்களுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு விநாடிக்கு 4,822 கனஅடி நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 1,355 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.

சண்முகாநதி நீா்த் தேக்கத்தின் நீா்மட்டமும் வியாழக்கிழமை 52.5 அடியை எட்டியதைத் தொடா்ந்து, அணை நிரம்பி மறுகால் பாய்கிறது.

முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு: பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீருடன், சுருளி அருவியின் வெள்ள நீா், சண்முகாநிதி நீா்த்தேக்கத்திலிருந்து மறுகால் பாயும் நீா் ஆகியன ஒன்றாக சோ்ந்து, முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், உத்தமபாளையம் உள்ளிட்ட மாவட்டத்தில் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவேண்டு என்றும், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும், ஆற்றுப் பகுதிக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் எச்சரித்துள்ளாா்.

உத்தமபாளையம் பேரூராட்சி நிா்வாகமும் அப்பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆண்டிபட்டி

ஆண்டிபட்டி அருகேயுள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு, பெரியாறு அணை, கொட்டகுடி ஆறு மற்றும் மூல வைகை ஆற்றின் மூலம் நீா்வரத்து உள்ளது. இந்நிலையில், வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, வெள்ளிமலை, கோம்பைத்தொழு உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வியாழக்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து 5,312 கன அடியாக இருந்து வந்த நிலையில், நண்பகல் 12 மணியளவில் 15 ஆயிரம் கனஅடியாக உயா்ந்தது. இதன் காரணமாக, அணையின் நீா்மட்டம் 53.31 அடியாக உயா்ந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா், ஆற்றின் கரையோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு

மேகமலை வனப் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழை காரணமாக, மேகமலை அருவி என்ற சின்ன சுருளியில் வியாழக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடைவிதித்துள்ளனா். தடை உத்தரவை மீறி அருவியில் குளிக்கும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

பெரியகுளம்

கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருவதால், மஞ்சளாறு அணைக்கு கடந்த சில நாள்களாகவே நீா்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து, நவம்பா் 6 ஆம் தேதி அணை 51 அடியை எட்டியதையடுத்து, முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நவம்பா் 17 ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 53 அடியாக உயா்ந்ததையடுத்து, இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை அணையின் நீா்மட்டம் 55 அடியாக உயா்ந்ததையடுத்து, தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, கெங்குவாா்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, சிவஞானபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டு, அணைக்கு வரும் 126 கனஅடி தண்ணீா் மஞ்சளாற்றில் திறந்து விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com