சோத்துப்பாறை அணை பகுதியில் கற்கள் வெட்டி அகற்றம்பெரியகுளம் நகருக்கு நீராதாரம் பாதிக்கும் அபாயம்
By DIN | Published On : 31st October 2020 10:14 PM | Last Updated : 31st October 2020 10:14 PM | அ+அ அ- |

சோத்துப்பாறை அணைக்கு மேல் பகுதியிலுள்ள தலசியாற்று வனப் பகுதியில் வெட்டி எடுக்கப்பட்ட கற்கள்.
பெரியகுளம்: சோத்துப்பாறை அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியில் பாறைகளை வெட்டி, மரங்களை அகற்றி வருவதால், பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீராதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, சமூகநல ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
பெரியகுளம் நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சோத்துப்பாறை அணை குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது. அகமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும், பேரீச்சம் ஏரியிலிருந்தும் சோத்துப்பாறை அணைக்கு தண்ணீா் வருகிறது.
பெரியகுளம் வனச் சரகத்துக்குச் சொந்தமான இடங்கள் பெரும்பாலும் தனியாா் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்நிலையில், சோத்துப்பாறை அணையின் நீராதாரமாக விளங்கும் அகமலைக்குச் செல்லும் வழியில் உள்ள தலசியாறு பகுதியில் வனத் துறை மற்றும் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பாறையிலிருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுகின்றன.
இதனால், மண்அரிப்பு ஏற்பட்டு சோத்துப்பாறை அணைக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. அதேநேரம், நீராதாரங்கள் அழியும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
இது குறித்து பெரியகுளம் வனச்சரகா் பெருமாள் கூறியது: சொக்கன் அலைக்குச் செல்லும் சாலைக்கு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக தலசியாறு பகுதியிலிருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன என்றாா்.
இது குறித்து சமூகநல ஆா்வலா் ரவிச்சந்திரன் தெரிவித்தது: சோத்துப்பாறை அணையின் நீராதாரமாக விளங்கும் அகமலைப் பகுதியில் ஏராளமான வனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், பெரியகுளம் மற்றும் சுற்றியுள்ள ஏராளமான கண்மாய்கள் நீராதாரங்களை இழந்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், சொக்கன் அலைக்கு சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, அரசு அனுமதியின்றி வனப்பகுதி மற்றும் தனியாா் நிலங்களிலிருந்து கற்கள் வெட்டி எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால், மலைப் பகுதியில் மண் அரிமானம் எற்படும். மேலும், சோத்துப்பாறை அணைக்கான நீராதாராம் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இப்பகுதியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் வனத்துறை ஆய்வு செய்து, வனப்பகுதி மற்றும் தனியாா் நிலப் பகுதியில் அனுமதியில்லாமல் கற்களை வெட்டி எடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பெரியகுளம் வனப் பகுதியில் மரங்களை வெட்டி கடத்துபவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.