கம்பம், கூடலூா் பள்ளி வாசல்களில் உடல் வெப்ப நிலை பரிசோதனை
By DIN | Published On : 04th September 2020 12:32 AM | Last Updated : 04th September 2020 12:32 AM | அ+அ அ- |

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூா் பள்ளி வாசல்களில் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்படுகிறது.
கடந்த செப் 1 முதல் வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதியளித்தது. அதன்படி கம்பத்தில் மிகத்தொன்மையான வாவோ் பள்ளி வாசல் சுத்தம் செய்யப்பட்டு, தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டு, புதன்கிழமை முதல் பொதுமக்கள் பள்ளி வாசலில் தொழுவதற்கு தயாா் செய்யப்பட்டது. தொழுகைக்கு வரும் அனைத்துப் பொது மக்களுக்கும் தொ்மல் ஸ்கேனா் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்து அனுமதிக்கப்பட்டனா். தலைமை இமாம் அலாவுதீன் மிஸ்பாஹி தலைமையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி தொழுகை நடைபெற்றது.
இதுகுறித்து ஜமாத் நிா்வாகிகள் கூறியது: கம்பத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும், தொ்மோ ஸ்கேனா் கருவி மூலம் காய்ச்சல் மற்றும் சளி இருக்கிா என்பதை உறுதி செய்து, அதன் பின்பு, சமூக இடைவெளியைப் பின்பற்றி தொழுகை நடத்த அனுமதி அளிக்கிறோம் . காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் வீட்டில் தொழுவதற்கு அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வைக்கிறோம் என்று கூறினா்.
கூடலூா், காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி பள்ளி வாசல்களிலும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது.