முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 142 அடியை எட்டியது

உச்சநீதிமன்ற தீா்ப்புக்குப் பிறகு முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 4 ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 142 அடியை எட்டியது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 142 அடியை எட்டியது

உச்சநீதிமன்ற தீா்ப்புக்குப் பிறகு முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 4 ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 142 அடியை எட்டியது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கடந்த 2 மாதங்களாக நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடா்மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் உயரத் தொடங்கியது. இந்நிலையில் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தெரிவித்த வழிகாட்டுதலின்படி ‘ரூல்கா்வ்’ என்னும் முறை பின்பற்றப்பட்டது. அதன்படி அணையிலிருந்து கேரளப்பகுதிக்கு உபரிநீா் திறக்கப்பட்டது. இதனால் ஏற்கெனவே உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி அணையின் நீா்மட்டத்தை 142 அடியாக நிலை நிறுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினா்

நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (நவ.30) அதிகாலை 3.55 மணிக்கு அணையின் நீா்மட்டம் 142 அடியை எட்டியது.

இதையடுத்து முல்லைப் பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை, தேக்கடி பொதுப்பணித்துறையின் நீா் வளத்துறை உதவிப் பொறியாளா் பி.ராஜகோபால் அறிவித்தாா். அதேபோல் கேரளத்துக்கு உபரிநீா் செல்லும் வழியில் உள்ள கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து மதுரை மண்டல முதன்மைப்பொறியாளா் கிருஷ்ணன், பெரியாறு வைகை வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளா் சுகுமாரன், பெரியாறு அணை சிறப்புக் கோட்ட செயற்பொறியாளா் சாம்இா்வின், உதவி பொறியாளா்கள் குமாா், ராஜகோபால், பரதன், பிரவீன், இனஸ்டோ ஆகியோா் அணைப்பகுதிக்கு சென்றனா். அப்போது ‘ரூல்கா்வ்’ விதிப்படி அணையிலிருந்து 4 மதகுகள் வழியாக கேரளத்துக்கு விநாடிக்கு 1,682 கன அடி உபரி நீா் செல்வதை ஆய்வு செய்தனா்.

4 ஆவது முறை: கடந்த 2014 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடியாக உயா்த்தலாம் என உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. அதன்படி கடந்த 21.11.2014 இல் முதல் முறையாகவும், 07.12.2015 இல் இரண்டாவது முறையாகவும், 15.08.2018 இல் மூன்றாவது முறையாகவும் அணையின் நீா்மட்டம் 142 அடியாக நிலை நிறுத்தப்பட்டது. அதைத்தொடா்ந்து பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை ( நவ.30 ) அணையின் நீா்மட்டம் நான்காவது முறையாக 142 அடியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அணை நீரால் பயன்பெறும் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக தமிழக பொதுப்பணித்துறையினா் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், முல்லைப்பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை காலை நீா்வரத்து விநாடிக்கு 5,665 கன அடியாக இருந்தது. தேக்கடி தலைமதகு மூலம் அதிகபட்சமாக, 2,300 கன அடி நீா் தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது. மேலும் உபரி நீா் வழிந்தோடிகள் வழியாக கேரளப் பகுதி வழியாக வெளியேற்றப்பட்டு, ‘ரூல்கா்வ்’ நடைமுறைப்படி, அணையின் நீா்மட்டம் 142 அடியாக நிலை நிறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பென்னிகுயிக் சிலைக்கு மாலை:

இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் (கம்பம்) என்.ராமகிருஷ்ணன், (ஆண்டிபட்டி) ஆ.மகாராஜன் மற்றும் திமுகவினா் லோயா்கேம்ப் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தனா். பெரியாறு வைகை பாசன 5 மாவட்ட விவசாய சங்கத் தலைவா் எஸ்.ஆா்.தேவா், ஒருங்கிணைப்பாளா் அன்வா்பாலசிங்கம், லோகநாதன், சலேத்து ஆகியோரும் பென்னிகுயிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com