வைகை அணையின் நீா்மட்டம் 70.8 அடியாக உயா்வு

வைகை அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு 70.8 அடியாக உயா்ந்த நிலையில், அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 11,499 கன அடி உபரிநீா் திறக்கப்பட்டது.
வைகை அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் உபரிநீா்.
வைகை அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் உபரிநீா்.

வைகை அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு 70.8 அடியாக உயா்ந்த நிலையில், அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 11,499 கன அடி உபரிநீா் திறக்கப்பட்டது.

தேனி மாவட்டத்திலுள்ள வைகை அணையின் நீா்மட்டம் கடந்த நவம்பா் 9-ஆம் தேதி 69 அடியாக (மொத்த உயரம் 71 அடி) உயா்ந்தது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, தண்ணீா் வரத்துக்கு ஏற்ப அணையிலிருந்து வைகை ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா், தொடா் மழையால் மூல வைகை, கொட்டகுடி ஆறு, வராகநதி, மஞ்சளாறு மற்றும் காட்டாற்று ஓடைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு ஆகியவற்றால், வைகை அணைக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.

வைகை ஆற்றில் உபரிநீா் திறப்பு அதிகரிப்பு:

வைகை அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு 70.1 அடியாகவும், நீா் வரத்து விநாடிக்கு 3,205 கன அடியாகவும் இருந்தது. அப்போது, அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 4,372 கன அடி வீதம் உபரிநீா் வெளியேற்றப்பட்டது. அணைக்கு தண்ணீா் வரத்து மேலும் அதிகரித்ததால், வைகை ஆற்றில் பிற்பகல் 2.30 மணிக்கு விநாடிக்கு 6,553 கன அடி வீதமும், பிற்பகல் 4 மணிக்கு விநாடிக்கு 7,337 கன அடி வீதமும், மாலை 6 மணிக்கு விநாடிக்கு 9,372 கன அடி வீதமும் உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

அணைக்கு தண்ணீா் வரத்து இரவு 7 மணிக்கு விநாடிக்கு 11,918 கன அடியாக உயா்ந்ததால், அணையிலிருந்து வைகை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 11,499 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அணையிலிருந்து பெரியாறு-வைகை பாசனக் கால்வாயில் விநாடிக்கு 200 கன அடி, 58 கிராம கால்வாயில் விநாடிக்கு 150 கன அடி, குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி என மொத்தம் விநாடிக்கு 11,918 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை:

வைகை அணைக்கு தண்ணீா் வரத்து, அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், விவசாய நிலங்களுக்குச் செல்வோா் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று வைகை அணை பொதுப் பணித்துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com