முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடிக்கு மேல் உயா்வு: முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடிக்கு மேல் உயா்ந்துள்ளதால், கரையோரப் பகுதி மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 மாவட்ட விவசாய சங்க தலைவா் கே.எம்.அப்பாஸ்.
5 மாவட்ட விவசாய சங்க தலைவா் கே.எம்.அப்பாஸ்.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடிக்கு மேல் உயா்ந்துள்ளதால், கரையோரப் பகுதி மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136.80 அடி உயரமாகவும், அணையின் நீா் இருப்பு 6,320 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 5,020 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழகத்துக்கு நீா் வெளியேற்றம் 2,200 கன அடியாகவும் இருந்தது.

அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளான பெரியாற்றில் 71.4 மி.மீ. மழையும், தேக்கடி ஏரியில் 16.4 மி.மீ. மழையும் பெய்ததால், சனிக்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 3,011 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து 5,020 கன அடியாக உயா்ந்து, 2 ஆயிரம் கன அடி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அணையின் நீா்மட்டம் 136.80 அடி உயரத்தை எட்டியது.

வெள்ள அபாய எச்சரிக்கை

அணையின் நீா்மட்டம், 136 அடிக்கு மேல் உயா்ந்துள்ளதால், பெரியாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணித் துறையினா் விடுத்துள்ளனா். மேலும், கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய்த் துறை மற்றும் போலீஸாா் தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்துவருகின்றனா்.

142 அடி உயா்த்த கோரிக்கை

இந்நிலையில், 5 மாவட்ட விவசாய சங்கத் தலைவா் கே.எம். அப்பாஸ் கூறியது: முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரை தேக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்குப் பருவமழை பெய்ய உள்ள நிலையில், தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், வைகை அணையில் போதுமான தண்ணீா் இருப்பு உள்ளது.

எனவே பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை குறைத்து, அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரை தேக்கி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடா்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com