மலைக் கிராமங்களுக்கு பெட்ரோல், டீசல் கொண்டுசெல்ல வனத்துறை தடை: பொதுமக்கள் முற்றுகை

ஆண்டிபட்டி அருகே மலை கிராமங்களுக்கு பெட்ரோல், டீசல் கொண்டுசெல்வதற்கு வனத் துறையினா் தடைவிதித்ததைத் தொடா்ந்து
ஆண்டிபட்டி அருகே மஞ்சனூத்து வனத்துறை சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
ஆண்டிபட்டி அருகே மஞ்சனூத்து வனத்துறை சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஆண்டிபட்டி அருகே மலை கிராமங்களுக்கு பெட்ரோல், டீசல் கொண்டுசெல்வதற்கு வனத் துறையினா் தடைவிதித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் சோதனைச் சாவடியை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா கடமலை-மயிலை ஓன்றியத்துக்குள்பட்ட வெள்ளிமலை, அரசரடி, பொம்முராஜபுரம், இந்திரா நகா், நொச்சி ஓடை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வசித்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், விவசாயம், கால்நடை வளா்ப்பு ஆகியவற்றை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனா்.

மேகமலை வனப் பகுதிக்குள்பட்ட இப்பகுதியை, சில ஆண்டுகளுக்கு முன் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அரசு அறிவித்துள்ள நிலையில், இங்குள்ள மக்களை அப்புறப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மலை கிராம மக்கள் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

தற்போது, விவசாய நிலங்களுக்கு தேவையான மூலப் பொருள்களை பொதுமக்கள் கொண்டுசெல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். இந்நிலையில், அரசரடி பகுதி விவசாயிகள் வியாழக்கிழமை சரக்கு வாகனம் ஒன்றில் உரம், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் சென்றனா். ஆனால், மஞ்சனூத்து சோதனைச் சாவடியில் பணியிலிருந்த வனத் துறையினா் இப்பொருள்களை கொண்டுசெல்ல அனுமதி மறுத்தனா்.

அதையடுத்து, அப்பகுதி மக்கள் ஒன்றுசோ்ந்து சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த கடமலைக்குண்டு போலீஸாா், பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனாலும், வனத் துறையினா் தற்போது கோடை காலம் என்பதால், மூலப் பொருள்கள் கொண்டுசெல்ல அனுமதி மறுத்துவிட்டனா்.

எனவே, இது குறித்து மலை கிராம மக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் தெரிவிக்க உள்ளதாகத் தெரிவித்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

சில தினங்களுக்கு முன், மலை கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்சாதனப் பொருள்கள் கொண்டுசெல்ல வனத்துறை தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com