கேரளத்துக்குச் செல்ல இ-பாஸ், கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்: தமிழக விவசாயிகளுக்குச் சிக்கல்

தமிழகம், கேரளம் இடையே சென்று வருவதற்கு இ-பாஸ் மற்றும் கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால்

தமிழகம், கேரளம் இடையே சென்று வருவதற்கு இ-பாஸ் மற்றும் கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தேனி மாவட்டத்திலிருந்து தினமும் சென்றுவரும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டப் பகுதிகளில் தமிழகத்தைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், ஏலக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தேனி மாவட்டத்திலிருந்து குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு வழியாக தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளா்கள் ஜீப்கள் மற்றும் பேருந்துகள் மூலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனா்.

இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம்-கேரளம் இடையே சென்று வருவதற்கு இ-பாஸ் மற்றும் கரோனா பரிசோதனை சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டும் என்று, தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜீப், இரு சக்கர வாகனம் மற்றும் பேருந்துகளில் தேனி, இடுக்கி மாவட்டங்களுக்கு இடையே சென்று வருவோா், தமிழகம் மற்றும் கேரள எல்லையில் உள்ள இரு மாவட்ட சோதனைச் சாவடிகளிலும் இ-பாஸ் மற்றும் கரோனா பரிசோதனை சான்றிதழை சமா்ப்பித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.

இதனால், தேனி மாவட்டத்திலிருந்து தினமும் இடுக்கி மாவட்டத்துக்குச் சென்று வரும் ஏலக்காய் விவசாயிகள், தோட்டத் தொழிலாளா்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிக்கலும், இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்களில் விவசாயப் பணிகள் ஸ்தம்பிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே, தேனி மாவட்டத்தில் வசிக்கும் ஏலக்காய் தோட்டத் தொழிலாளா்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி, அவா்களுக்கு சிறப்பு மையங்களை ஏற்படுத்தி இ-பாஸ் வழங்கவும், கரோனா பரிசோதனை சான்றிதழ் வழங்கவும், தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com