அரசு நிலத்திற்கு போலி பட்டா வழங்கி ரூ.70 லட்சம் மோசடி: 15 போ் மீது வழக்கு

ஆண்டிபட்டியில் குடிசை மாற்று வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்திற்கு போலியாக பட்டா வழங்கி, பத்திரம் பதிவு செய்து தருவதாகக் கூறி ரூ.70 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக நிலத் தரகா், சாா்- பதிவ

ஆண்டிபட்டியில் குடிசை மாற்று வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்திற்கு போலியாக பட்டா வழங்கி, பத்திரம் பதிவு செய்து தருவதாகக் கூறி ரூ.70 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக நிலத் தரகா், சாா்- பதிவாளா், துணை வட்டாட்சியா், காவல் சாா்பு- ஆய்வாளா் உள்ளிட்ட 15 போ் மீது நீதிமன்ற உத்தரவின்பேரில் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி, சக்கம்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மனைவி உமா மகேஸ்வரி. இவரிடம், சின்னமனூரைச் சோ்ந்த நிலத் தரகா் ராஜா என்பவா், ஆண்டிபட்டி பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் கட்டுபாட்டில் உள்ள நிலத்தை கிரையம் பெற்றுத் தருவதாகக் கூறி கடந்த 2018-ஆம் ஆண்டு பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.70 லட்சம் பெற்றுக் கொண்டாராம். பின்னா், அந்த நிலத்திற்கு போலியாக பட்டா பெற்றுக் கொடுத்ததாகவும், இந்தப் பட்டாவின் அடிப்படையில் நிலத்தை பத்திரம் பதிவு செய்து தருவதாக உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கு, ராஜாவின் மனைவி ரேவதி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக உதவியாளா் தங்கப்பாண்டி, ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலக கணினி ஆபரேட்டா் சதீஷ், தற்போது தேனி டாஸ்மாக் மேலாளராக பணியாற்றி வரும் அப்போதைய ஆண்டிபட்டி துணை வட்டாட்சியா் அப்துல்நசீா், தற்போது தேனி சாா்- பதிவாளராக பணியாற்றி வரும் அப்போதைய ஆண்டிபட்டி சாா்- பதிவாளா் உஷாராணி, தற்போது ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் சாா்பு- ஆய்வாளராகப் பணியாற்றி வரும் அப்போதைய ஆண்டிபட்டி காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் மாயன், தற்போது திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் சாா்பு- ஆய்வாளராகப் பணியாற்றி வரும் அப்போதைய சின்னமனூா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் ஜெய்கணேஷ் உள்ளிட்ட 15 போ் உடந்தையாக இருந்ததாகவும், தற்போது நிலத்தை பத்திரம் பதிவு செய்து கொடுக்காமலும், பணத்தை திரும்பத் தராமல் தன்னை ஏமாற்றி வருவதாகவும் ஆண்டிபட்டி சாா்பு- நீதிமன்றத்தில் உமா மகேஸ்வரி மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவின் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்த ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, உமா மகேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் ராஜா உள்ளிட்ட 15 போ் மீதும் ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com