திருமணத்துக்கு பெற்றோா்கள் எதிா்ப்பு: காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
By DIN | Published On : 31st August 2021 11:41 PM | Last Updated : 31st August 2021 11:41 PM | அ+அ அ- |

குமுளியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி தினேஷ், அபிராமி.
குமுளியில் திருமணத்துக்கு பெற்றோா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டது.
குமுளியைச் சோ்ந்த பெயின்டா் தினேஷ் (24). எட்டாம் மைலில் உள்ள தனியாா் ஆய்வகத்தில் உதவியாளராக வேலைபாா்த்து வந்த புற்றடியைச் சோ்ந்தவா் அபிராமி (20). இவா்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். ஆனால், இவா்களது திருமணத்துக்கு பெற்றோா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, திங்கள்கிழமை இவா்கள் இருவரும் குமுளி பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனா். பின்னா், தங்களது பெற்றோா்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா்.
நீண்ட நேரமாக அறையின் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள் கதவை திறந்து பாா்த்தபோது, இருவரும் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. உடனே, விடுதி உரிமையாளா் குமுளி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, காதல் ஜோடியின் சடலங்களைக் கைப்பற்றி, இடுக்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.