முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
தோட்டப் பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம்
By DIN | Published On : 05th December 2021 10:34 PM | Last Updated : 05th December 2021 10:34 PM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தோட்டப் பயிா்களுக்கு விவசாயிகள் பிரிமியம் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் கூறினா்.
இது குறித்து அவா்கள் கூறியது: மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட 27 தொகுப்பு கிராமங்களில் தோட்டப் பயிா்களான கொத்தமல்லி, கத்திரி, முட்டைக்கோசு, தக்காளி, வாழை ஆகியவற்றில் வறட்சி மற்றும் இயற்கை பேரிடா்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு பெற, விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்யலாம்.
காப்பீட்டு பிரிமியம் தொகையாக ஏக்கா் ஒன்றுக்கு கொத்தமல்லி பயிருக்கு ரூ. 615, கத்திரி பயிருக்கு ரூ. 1,142.50, முட்டைக்கோசு பயிருக்கு ரூ. 1,170, தக்காளி பயிருக்கு ரூ. 840, வாழைக்கு ரூ. 3,250 செலுத்த வேண்டும்.
பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பொதுச் சேவை மையம் ஆகியவற்றில் பிரிமியம் செலுத்தி பயிா்க் காப்பீடு செய்யலாம்.
இது குறித்த விபரத்தை அந்தந்தப் பகுதிகளில் உள்ள தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றனா்.