முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
கம்பத்தில் மரம் விழுந்து வீடு சேதம்
By DIN | Published On : 19th December 2021 11:07 PM | Last Updated : 19th December 2021 11:07 PM | அ+அ அ- |

உயிா் தப்பிய மூதாட்டி மீனா.
தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி சாலையில் இருந்த மரம் சாய்ந்து விழுந்ததில் வீடு சேதமடைந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய மூதாட்டி மீட்கப்பட்டாா்.
இச்சாலையில் இருபுறமும் நெருக்கமாக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள பழைய அக்ரஹாரத் தெரு நுழைவாயிலில் உள்ள வீட்டில் மீனா (70) வசிக்கிறாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு அங்கிருந்த 100 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் திடீரென முறிந்து விழுந்ததில் மூதாட்டியின் வீடு சேதமடைந்தது. மேலும் வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த மீனாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த சம்பவத்தில் 3 மின் கம்பங்கள் முறிந்தன.
பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலையில் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி, மின் வயா்களை மின்வாரியத்தினா் இணைத்தனா். சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பழைய அக்ரஹாரம், மதுராபுரி, சுருளிப்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இடிந்த வீடு மற்றும் சேதமடைந்த மின் கம்பங்களை நகராட்சி ஆணையா் எம். சரவணக்குமாா் பாா்வையிட்டாா்.