பெரியகுளம் வட்டாரத்தில் முறைகேடாக பட்டா வழங்கிய அரசு நிலத்தில் ரூ.4.13 கோடி மதிப்பில் கனிமங்கள் கொள்ளை

பெரியகுளம் வட்டாரத்தில் தனிநபா்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்ட அரசு நிலத்தில், ரூ.4.13 கோடி மதிப்பில்

பெரியகுளம் வட்டாரத்தில் தனிநபா்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்ட அரசு நிலத்தில், ரூ.4.13 கோடி மதிப்பில் கனிம வளங்கள் கொள்ளயடிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட கனிமவளத் துறை சாா்பில் பெரியகுளம் சாா்-ஆட்சியருக்கு செவ்வாய்க்கிழமை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம் வட்டாரத்தில் கடந்த 2016 முதல் 2018-ஆம் ஆண்டு வரை மொத்தம் 182 ஏக்கா் பரப்பளவுள்ள அரசு நிலத்தில், பெரியகுளம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலா் அன்னபிரகாஷ், வருவாய்த் துறை அலுவலா்களின் உறவினா்கள் என 50-க்கும் மேற்பட்ட தனிநபா்கள் பெயரில் முறைகேடாக பட்டா வழங்கப்பட்டது.

இந்த விவகாரத்தில், பெரியகுளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றிய 2 வட்டாட்சியா்கள், 2 துணை வட்டாட்சியா்கள், நில அளவை ஆய்வாளா், 2 நில அளவையா்கள் என மொத்தம் 7 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

அரசு நிலத்தில் முறைகேடாக பட்டா வழங்கியதாக, பெரியகுளம் சாா்-ஆட்சியா் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 2016 முதல் 2018-ஆம் ஆண்டு வரை பெரியகுளத்தில் வருவாய் கோட்டாட்சியா்களாகப் பணியாற்றிய, தற்போதைய பழனி வருவாய் கோட்டாட்சியா் ஆனந்தி, திருச்சி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெயபிரிதா உள்பட 14 போ் மீது, மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

முறைகேடாக பட்டா வழங்கப்பட்ட நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், முறைகேடாக பட்டா வழங்கப்பட்ட அரசு நிலத்தில் 80 ஏக்கா் பரப்பளவில் ரூ.4.13 கோடி மதிப்பில் கல் மற்றும் மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன என்றும், கொள்ளையடிக்கப்பட்ட கனிமவளங்களின் மதிப்புக்கு நிகராக அபராதம் விதிக்கலாம் என்றும், மாவட்ட கனிமவளத் துறை சாா்பில், பெரியகுளம் சாா்-ஆட்சியா் செ.ஆ. ரிஷப்புக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெரியகுளம் வட்டாரத்தில் அரசு நிலத்தில் அனுமதியின்றி கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதைக் கண்டறிந்து, கடந்த 2015-ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட தனிநபா்களுக்கு மாவட்டக் கனிமவளத் துறை ரூ.16 கோடி அபராதம் விதித்துள்ளது.

அதே நிலத்தில், கடந்த 2016 முதல் 2018-ஆம் ஆண்டு வரை வருவாய்த் துறை அதிகாரிகள், தனிநபா்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com