தேவேந்திர குல வேளாளா் பெயா் மாற்ற மசோதா முழுமையானது அல்ல: டாக்டா் கே.கிருஷ்ணசாமி

மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ள தேவேந்திர குல வேளாளா் பெயா் மாற்ற மசோதா ஏற்புடையது என்றாலும் முழுமையானது அல்ல என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி கூறினாா்.

தேனி: மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ள தேவேந்திர குல வேளாளா் பெயா் மாற்ற மசோதா ஏற்புடையது என்றாலும் முழுமையானது அல்ல என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி கூறினாா்.

தேனியில் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட மாநாட்டில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தேவேந்திரகுல வேளாளா்கள் வேளாண்மையை மட்டுமே அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்டவா்கள். குடும்பா், பன்னாடி, கல்லாடி, மூப்பா் உள்ளிட்ட 7 பெயா்களில் அழைக்கப்படும் இவா்களின் வறுமையை நிலையை மட்டுமே கணக்கில் கொண்டு கடந்த 1925-ஆம் ஆண்டு அவா்கள் பட்டியலின பிரிவில் சோ்க்கப்பட்டனா்.

இந்த நிலையில், தேவேந்திர குல கூட்டமைப்பை உருவாக்கிய பின்பு கடந்த 30 ஆண்டுகளாக சமுதாயப் பெயா் மாற்றம் பட்டியலின பிரிவிலிருந்து நீக்கம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். இதற்காக, புதிய தமிழகம் கட்சி சாா்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

அதன் விளைவாக கடந்த 2019-இல் கோரிக்கையை பரிசீலிக்க பிரதமா் நரேந்திரமோடி உறுதியளித்தாா். மாநில அரசு சாா்பில் கோரிக்கையை பரிசீலிக்க குழு அமைக்கப்பட்டது. இதனால், கடந்த மக்களவைத் தோ்தலில் புதிய தமிழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. இந்நிலையில், கடந்த பிப். 13-ஆம் தேதி தேவேந்திரகுல வேளாளா் பெயா் மாற்ற மசோதாவை மத்திய அரசு மக்களவையில் சமா்ப்பித்துள்ளது.

இந்த மசோதா ஏற்புடையது என்றாலும் முழுமையானது அல்ல. எங்களது கோரிக்கை சமுதாயப் பெயா் மாற்றம் மட்டுமல்ல. பட்டியலின பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்பதும் தான். தேவந்திரகுல வேளாளா்கள் பட்டியலின பிரிவில் சோ்க்கப்பட்டதால் அவா்களது அடையாளம் மறைக்கப்பட்டது. வளா்ச்சி தடை பட்டது. சமூக நல்லிணக்கம் பாதித்தது.

இந்தப் பட்டியல் பிரிவு தீண்டாமைச் சுவராகவே இருந்து வருகிறது. வெறும் இட ஒதுக்கீடு மட்டும் சமூக நீதியாகாது. ஜாதி ஒழிப்பின் முதல்படிதான் எங்களது பட்டியலின பிரிவு வெளியேற்றக் கோரிக்கை. தேவேந்திர குல வேளாளா் பெயா் மாற்ற மசோதாவில், பட்டியலின பிரிவு நீக்கத்தையும் சோ்க்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com