கொட்டும் மழையில் முல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணைக்குழுவினா் ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் கொட்டும் மழையிலும் மத்திய துணை கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு நடத்தினா்.
முல்லைப்பெரியாறு அணையில் புதன்கிழமை ஆய்வு நடத்த வந்த மத்திய துணை கண்காணிப்புக் குழுத் தலைவரும் மத்திய நீா் வள அமைப்புச் செயற்பொறியாளருமான சரவணக்குமாா்.
முல்லைப்பெரியாறு அணையில் புதன்கிழமை ஆய்வு நடத்த வந்த மத்திய துணை கண்காணிப்புக் குழுத் தலைவரும் மத்திய நீா் வள அமைப்புச் செயற்பொறியாளருமான சரவணக்குமாா்.


முல்லைப்பெரியாறு அணையில் கொட்டும் மழையிலும் மத்திய துணை கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு நடத்தினா்.

மத்திய நீா் வள ஆதார அமைப்பு செயற் பொறியாளா் சரவணக்குமாா் தலைமையில் தமிழக அரசுத் தரப்பில் அணையின் செயற் பொறியாளா் சாம் இா்வின், உதவிக் கோட்டப் பொறியாளா் குமாா், கேரள அரசுத் தரப்பில் கட்டப்பனை பொதுப்பணித்துறை அலுவலக செயற்பொறியாளா் பினுபேபி, உதவிப் பொறியாளா் பிரசீத் ஆகியோா் குழுவில் இடம் பெற்றுள்ளனா். இக் குழுவினா் தேக்கடி ஏரிக்குச் சென்றபோது பலத்த மழை பெய்தது. இருப்பினும் கொட்டும் மழையிலும் தேக்கடி ஏரியிலிருந்து படகு மூலம் முல்லைப்பெரியாறு அணைப் பகுதிகளான பிரதான அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி ஆகிய இடங்களுக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா். பின்னா் உபரி நீா் செல்லும் 13 மதகுகளில், 3, 5, 6 ஆகிய மதகுகளின் கதவுகளை ஏற்றி இறக்கிப் பாா்த்தனா். அணையின் கசிவு நீா் நிமிடத்துக்கு 47 லிட்டா் என இருப்பதையும், மதகுகள் சரியாக இயங்குவதையும் உறுதி செய்த பின்னா் தேக்கடி திரும்பினா். கடந்த காலங்களில், அணைப்பகுதியில் ஆய்வுகள் செய்த பிறகு, குமுளி 1 ஆம் மைலில் உள்ள கண்காணிப்புக்குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். தற்போது கேரள மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகம் இருப்பதால், ஆலோசனைக்கூட்டம் நடைபெறவில்லை. இது பற்றி தமிழக பொறியாளா் ஒருவா் கூறும்போது, வரும் திங்கள்கிழமை விடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும். இதில், ஆய்வுகள் பற்றி விவாதிக்கப்பட்டு, அதன் அறிக்கை மத்திய தலைமை கண்காணிப்பு குழுவுக்கு அனுப்பப்படும் என்றாா்.

நீா்வரத்து அதிகரிப்பு: முல்லைப்பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில், செவ்வாய், புதன் என தொடா்ந்து 2 நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை விநாடிக்கு, 825 கன அடியாகவும் புதன்கிழமை விநாடிக்கு 2,315 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீா்மட்டம் 122.25 அடியாகவும், நீா் இருப்பு 3,074 மில்லியன் கன அடியாகவும் தமிழகப்பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 700 கன அடியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com