97 ஆண்டுகளுக்குப் பிறகு மூணாறில் சுற்றுலா ரயிலை இயக்க நிதி ஒதுக்கீடு:இடுக்கி, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

தேனி மாவட்ட எல்லையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மூணாறில், 97 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலா ரயிலை இயக்க அம்மாநில அரசு நிதியை ஒதுக்கி உள்ளது.
97 ஆண்டுகளுக்குப் பிறகு மூணாறில் சுற்றுலா ரயிலை இயக்க நிதி ஒதுக்கீடு:இடுக்கி, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

கம்பம்: தேனி மாவட்ட எல்லையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மூணாறில், 97 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலா ரயிலை இயக்க அம்மாநில அரசு நிதியை ஒதுக்கி உள்ளது.

மூணாறில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக, சுற்றுலாத் துறை மூலம் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக, சுற்றுலா மூலம் அரசு மற்றும் தனியாா் துறையினருக்கு வருவாய் நின்றது. இதை நம்பியிருந்த உணவகங்கள், விடுதிகள், வாகனங்கள், வழிகாட்டிகள், சாலையோர கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

மேலும், தமிழக-கேரள மாநிலங்களிடையேயான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால், இடுக்கி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலைபாா்த்து வந்த தேனி மாவட்ட மக்களும் பாதிக்கப்பட்டனா்.

மூணாறுக்கு ரூ.117 கோடி ஒதுக்கீடு

இந்நிலையில், சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டி, கேரள அரசு ஜனவரி 15 ஆம் தேதி ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதில், மூணாறு சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த மட்டும் ரூ.117 கோடி ஒதுக்கிய அம்மாநில நிதி அமைச்சா் தாமஸ் ஐசக், 97 ஆண்டுகளுக்குப் பிறகு மூணாறில் சுற்றுலா ரயில் இயக்கப்படும் எனவும் அறிவித்தாா்.

இந்த அறிவிப்பானது, இடுக்கி மற்றும் தேனி மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மூணாறை ஒட்டியுள்ள தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொழில் வளா்ச்சிக்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

மூணாறு சிறப்பு சுற்றுலா ரயில், மூணாறு, மாட்டுப்பெட்டி அணை, ராஜமலை, இரவிகுளம் தேசியப் பூங்கா, வட்டவடா, மறையூா், காந்தலூா் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களின் வழியாக இயக்கப்பட உள்ளது. இந்த வழித்தடங்களில் கண்கொள்ளா இயற்கை காட்சிகளை ரசித்தவாறே பயணிகள் பயணிக்க முடியும். மேலும், வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகளவில் உள்ளதால், பழைய ரயில் பாதையான தடங்கல் வழியாக ஆய்வுகள் செய்யப்பட்டு, இடை இடையேயுள்ள தனியாா் தேயிலை தோட்டங்கள் வழியாகச் செல்வதற்கும் அனுமதி பெறப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் முதல் ரயில்

இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயா்கள், மூணாறிலிருந்துதான் கடந்த 1902 இல் மலை ரயிலை இயக்கியுள்ளனா். இங்கிருந்து குண்டலாவேலி, டாப்-ஸ்டேஷன் வரை தேயிலையை பெட்டியில் ஏற்றி, அதில் காளை மாடுகளை பூட்டி இழுத்துச் செல்லும்படி இயக்கி உள்ளனா். ரயில் தண்டவாளத்தில் சுமைகளை காளை மாடுகள் எளிதாக இழுத்துச் சென்றுள்ளன.

அதன்பின்னா், கடந்த 1908 இல் காளை மாடுகளுக்குப் பதிலாக, நீராவி இயந்திரத்தைப் பொருத்தி மோனோ ரயிலை இயக்கியுள்ளனா்.

கடந்த 1924 இல் மூணாறில் பெரும் வெள்ளம் ஏற்பட்டதால், ரயில் பாதைகள் அனைத்தும் அழிந்தன. அதன்பின்னா், ரயில் இயக்கமும் நிறுத்தப்பட்டுவிட்டது. அதேநேரம், அப்போது செயல்பட்ட குண்டலாவேலி ரயில் நிலையக் கட்டடம் இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com