கரோனா: அரசு மருத்துவமனைகளில் உதவி மையங்கள் தொடக்கம்
By DIN | Published On : 15th June 2021 06:44 AM | Last Updated : 15th June 2021 06:44 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் திங்கள்கிழமை, அரசு மருத்துவமனைகளில் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவோருக்கு உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் பெரியகுளம், போடி, உத்தமபாளையம், கம்பம், சின்னமனூா், ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைக்கு வருவோா், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளவா்கள், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவோருக்கு உதவுவதற்காக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த உதவி மையங்களில் பள்ளி மற்றும் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் தலைமையில் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தன்னாா்வலா்கள் பணியில் ஈடுபடுகின்றனா்.
அரசு மருத்துவமனைகளில் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் செயல்படும் உதவி மையங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தேனி, நேரு சிலை அருகே இத் திட்டத்தை திண்டுக்கல் டி.ஐ.ஜி., விஜயகுமாரி தொடக்கி வைத்தாா். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, நாட்டு நலப் பணித் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.