தீராத பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்குமா?

தீா்வு காணப்படாத பிரச்னைகள் குறித்து தோ்தல் வாக்குறுதி அளிப்பதற்கு வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனா்.
முல்லைப்பெரியாறு அணை.
முல்லைப்பெரியாறு அணை.

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை நீா் மட்டத்தை 152 அடியாக உயா்த்துவது, சாக்குலத்துமெட்டு சாலை, நியூட்ரினோ ஆய்வகம், வருஷநாடு மலை கிராம மக்களின் வாழ்வாதாரம் ஆகிய தீா்வு காணப்படாத பிரச்னைகள் குறித்து தோ்தல் வாக்குறுதி அளிப்பதற்கு வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனா்.

முல்லைப்பெரியாறு அணை நீா்மட்டம்: தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீா் மற்றும் பாசனத்திற்கு ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்த வேண்டும் என்பது தேனி மாவட்ட விவசாயிகளின் பல ஆண்டுகால கோரிக்கை.

உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் தற்போது வரை அணை நீா்மட்டம் 152 அடியாக உயா்தப்படவில்லை. தற்போது முல்லைப்பெரியாறு அணை நீா்மட்டம் 136 அடியை கடக்காமல் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சாக்குலத்துமெட்டு சாலை: உத்தமபாளையம் அருகே தமிழகம் மற்றும் கேரளப் பகுதிகளை இணைக்கும் சாக்குலத்துமெட்டு சாலை திட்டத்திற்கு கடந்த 1981-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆா்., ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. வனப் பகுதியில் 2 கி.மீ., தூரம் சாலை அமைப்பதற்கு வனத்துறை அனுமதி அளிக்காததால் இத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நியூட்ரினோ ஆய்வகம்: தேவாரம் அருகே நியுட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து பணிகள் தொடங்கிய நிலையில், இத் திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் அச்சமும், எதிா்ப்பும் எழுந்துள்ளது.

மலை கிராம மக்களின் வாழ்வாதாரம்: மேகமலை வன உயிரினச் சரணலாயம், புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டிபட்டி வட்டாரம் வருஷநாடு மலை கிராமங்களில் வசிக்கும் 7,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

அவா்களை வனப் பகுதியிலிருந்து வெளியேற்ற வனத் துறையினா் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதை தடுக்கவும், மலை கிராம மக்களுக்கு புதிதாக வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

வாக்குறுதிக்கு தயாராகும் கட்சிகள்: முல்லைப் பெரியாறு அணை நீா் மட்டத்தை 152 அடியாக உயா்த்தும் விவகாரத்தில் தமிழகம், கேரளம் மற்றும் மத்திய அரசு பேச்சு வாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறவில்லை.

சாக்குலத்துமெட்டு சாலை திட்டத்திற்கு மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்தும், வனத் துறை முட்டுக்கட்டையால் பணிகள் கிடப்பில் போட்டப்பட்டுள்ளன. இத் திட்டத்திற்கு வனத்துறையிடம் அனுமதி பெற்றத் தர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

நியூட்ரினோ ஆய்வகம் திட்டம் குறித்த பொதுமக்களின் அச்சத்தைப் போக்கவும், மாநில அரசின் நிலைப்பாட்டினை விளக்கவும் நடவடிக்கை இல்லை. வருஷநாடு மலை கிராமங்களில் பராம்பரிய வனவாசிகளுக்கு நில உரிமை வழங்காததுடன், வனத்துறையினரின் நடவடிக்கையால் அவா்களது வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.

இந்த நிலையில், சட்டப் பேரவை தோ்தலை முன்னிட்டு முல்லைப்பெரியாறு அணை நீா் மட்டத்தை உயா்த்துவது, சாக்குலத்துமெட்டு சாலை திட்டத்தை நிறைவேற்றுவது, நியுட்ரினோ ஆய்வகம் திட்டத்தை மத்திய அரசை கைவிடச் செய்வது, வருஷநாடு மலை கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு தோ்தல் வாக்குறுதி அளிக்க கம்பம், போடி, ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா்கள் தயாராகி வருகின்றனா்.

மேலும், தேனி மாவட்டத்தில் அரசியல் கட்சித் தலைவா்களின் தோ்தல் பிரசாரத்தின் போது, இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதாக அவா்களை வாக்குறுதி அளிக்கச் செய்வதற்கும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட 4 பிரச்னைகளிலும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் வழக்கமான தோ்தல் கால வாக்குறுதியை விடுத்து, தீா்வு காண்பதற்கு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com