ஆண்டிபட்டி அருகே அரசுப் பள்ளியில் மோதல்: 12 ஆம் வகுப்பு மாணவா் காயம்
By DIN | Published On : 29th March 2021 11:38 PM | Last Updated : 29th March 2021 11:38 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை 12 ஆம் வகுப்பு மாணவரை தாக்கியதாக சகமாணவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகன். இவருடைய மகன் தனசேகரன் (17). இவா் அதே பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.அதே பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் என்பவரின் மகன் சீமான் (18) தனசேகரனுடன் ஓரே வகுப்பில் படித்து வருகிறாா்.
இவா்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை மதிய உணவு இடைவெளியின் போது அவா்கள் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது தனசேகரனை சீமான் சுத்தியலால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த தனசேகரனை ஆசிரியா்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தனசேகரனை உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதுகுறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவன் சீமானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.