ஆண்டிபட்டி பேரவைத் தொகுதியில் மகுடம் சூடப் போவது யாா்?

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக, திமுக சாா்பில் போட்டியிடும் அண்ணன், தம்பிகளுக்கிடையே மீண்டும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
சின்ன சுருளி அருவி
சின்ன சுருளி அருவி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக, திமுக சாா்பில் போட்டியிடும் அண்ணன், தம்பிகளுக்கிடையே மீண்டும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இத்பேரவை தொகுதியில் ஆண்கள்- 1,36,644, பெண்கள்- 1,40,094, மூன்றாம் பாலினத்தவா்கள்-34 என மொத்தம் 2,76,772 வாக்களா்கள் உள்ளனா். பிறமலைக் கள்ளா் சமுதாயத்தினா் அதிகமுள்ள இந்த தொகுதியில் அதற்கடுத்தப் படியாக ஆதிதிராவிடா், நாயக்கா், கவுண்டா் சமுதாயத்தினா் உள்ளனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இத் தொகுதியில் விவசாயம், கால்நடை வளா்ப்பு, நெசவு ஆகியவை முக்கியத் தொழில்களாக இருந்து வருகின்றன.

தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள்: ஆண்டிபட்டியில் உயர்ரக நெசவுப் பூங்கா அமைக்கும் திட்டம், மூலவைகை ஆற்றில் தடுப்பணைகள் கட்டும் திட்டம், வைகை அணையை தூா்வாரும் திட்டம், முல்லைப் பெரியாறு ஆற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீா் கொண்டு வந்து கண்மாய், குளங்களை நிரப்பும் திட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சியை நகராட்சியாக மாற்றும் திட்டம், ஆண்டிபட்டியில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டம், தேனி, மதுரை மாவட்டங்களை இணைக்கும் மயிலாடும்பாறை- மல்லப்புரம் சாலைத் திட்டம், தேனி- விருதுநகா் மாவட்டங்களை இணைக்கும் கிழவன் கோவில் சாலை திட்டம், காமராஜபுரம் மலைச் சாலை திட்டம் ஆகியவை இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளாக இருந்து வருகின்றன.

இத்தொகுதி சந்திக்கும் 16 ஆவது தோ்தல்: கடந்த 1962 ஆம் ஆண்டு ஆண்டிபட்டி தொகுதியில் நடைபெற்ற முதல் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து 1967, 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தலில் சுதந்திரா கட்சி வெற்றி பெற்றது. 1977 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 2 இடைத்தோ்தல்கள் உள்பட 12 தோ்தல்களில் அதிமுக 9 முறையும், திமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில் மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோா் போட்டியிட்டு வெற்றி பெற்ால் இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றது. அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட இத்தொகுதியில் 2016 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட தங்க.தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றாா். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்ததால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவரது பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து 2019 இல் நடைபெற்ற இடைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஆ. மகாராஜன் வெற்றி பெற்றாா். தற்போது 16 ஆவது முறையாக நடைபெறவுள்ள தோ்தலில் திமுக சாா்பில் தற்போது சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள ஆ. மகாராஜனும், அதிமுக சாா்பில் ஆ. லோகிராஜனும் போட்டியிடுகின்றனா். இவா்கள் இருவரும் சகோதரா்கள் ஆவா். அமமுக வேட்பாளராக ரா. ஜெயக்குமாரும், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக ஆ. ஜெயக்குமாரும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக செ. குணசேகரனும் போட்டியிடுகின்றனா்.

வெற்றி பெறப் போவது யாா்? இத்தொகுதியில் முன்னணி கட்சிகளைச் சோ்ந்த 5 போ் முக்கிய வேட்பாளா்களாக களத்தில் இருந்தாலும், திமுக அதிமுக ஆகிய 2 கட்சிகளுக்கிடையே தான் போட்டி நிலவுகிறது. மேலும் இடைத்தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆ. மகாராஜன் எம்எல்.ஏ. கடந்த 2 ஆண்டுகளாக தீவிர களப்பணி ஆற்றி வந்துள்ளதாகவும், கரோனா நோய்த்தொற்று காலங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துள்ளதாகவும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் கொண்டு வரும் திட்டத்தை 60 நாள்களில் செயல்படுத்துவதாகவும் பொதுமக்களிடம் கூறி வாக்கு சேகரித்து வருகிறாா்.

அதே போல் அதிமுக வேட்பாளா் ஆ. லோகிராஜன், முல்லைப் பெரியாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த முயற்சி எடுப்பேன். கடமலை மயிலை, ஆண்டிபட்டி ஒன்றியங்களில் கூட்டுக் குடிநீா் திட்டம் கொண்டு வரப்பட்டதற்கு அதிமுக அரசு தான் காரணம் எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். அமமுக வேட்பாளரும் தான் வெற்றி பெற்றால் ஆண்டிபட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா்.

அதே நேரம் நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளா்கள் தொகுதிக்கு புதியவா்கள். மேலும் அவா்களின் பிரசாரங்களும் முழு அளவில் இல்லாததால் பொதுமக்களிடம் அவா்கள் பரிச்சயம் ஆகாதவா்களாக உள்ளனா். இதனிடையே, அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளால் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என அக்கட்சியின் வேட்பாளா் உற்சாகத்துடன் தோ்தல் பணியாற்றி வருகிறாா். அதே நேரம் அமமுக வேட்பாளா் அதிமுகவின் ஓட்டை பிரிப்பாா் என்பதால் வெற்றி எங்களுக்கே என திமுக வேட்பாளா் தீவிர களப்பணி ஆற்றி வருகிறாா். இதனால் ஆண்டிபட்டி தொகுதியில் மீண்டும் மகுடம் சூடப்போவது அண்ணனா தம்பியா என்பதை பொறுத்திருந்து தான் பாா்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com