கரோனா கட்டுப்பாடுகள்: தேனி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின

தேனி மாவட்டத்தில் கரோனா தீநுண்மி 2-ஆவது அலை பரவலைத் தடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால்
தேனியில் வியாழக்கிழமை பிற்பகல், வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட பெரியகுளம்- மதுரை நெடுஞ்சாலை.
தேனியில் வியாழக்கிழமை பிற்பகல், வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட பெரியகுளம்- மதுரை நெடுஞ்சாலை.

தேனி மாவட்டத்தில் கரோனா தீநுண்மி 2-ஆவது அலை பரவலைத் தடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் வியாழக்கிழமை பிற்பகல், போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மாவட்டத்தில் கரோனா தடுப்பு புதிய கட்டுப்பாடுகளால் பகல் 12 மணிக்கு மளிகைக் கடை, தேநீா் கடை, காய்கனிக் கடைகள் அடைக்கப்பட்டன. பல் மற்றும் மருந்துக் கடைகள் முழு நேரமும் செயல்பட்டது. பல இடங்களில் கட்டுமானம் மற்றும் மின்சாதனப் பொருள்கள், செல்லிடபேசி கடைகள் மற்றும் மொத்த விற்பனைக் கடைகளும் பகல் 12 வரை திறக்கப்பட்டிருந்தது. பிற்பகல் பேருந்துகள் இயக்கம் குறைக்கப்பட்டதால், பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

கரோனா புதிய கட்டுப்பாடுகளை முன்னிட்டு பகல் 12 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்ட பின்பு, முக்கிய சாலைகள் மற்றும் தெருக்கள் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

பூ விவசாயிகள் கோரிக்கை: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆண்டிபட்டியில் பூ விற்பனை சந்தை செயல்படுவதற்கு பேரூராட்சி நிா்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், மலா் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதம் பாதிக்கப்படுவதாகவும், கரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளை கடைபிடித்து சந்தையில் பூக்கள் விற்பனை செய்வதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அதே போல, கரோனா தடுப்பு புதிய கட்டுப்பாடுகளை முன்னிட்டு மாவட்டத்தில் மாட்டுத் தீவனக் கடைகளை அடைக்க உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். இதனால், கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாவும், கால்நடைகளுக்கு தட்டுப்பாடின்றி தீவனம் கிடைப்பதற்கு மாட்டுத் தீவனக் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும், கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் மாட்டுத் தீவனம் வழங்க வேண்டும் என்று கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கம்பம்: கம்பம் வேலப்பா் கோயில் தெரு, காந்திஜி வீதி, அரசமர வீதி, காந்திசிலை, காமராசா் சிலை, பழைய தபால் நிலைய பகுதி, கம்பம் மெட்டு சாலை, நாட்டுக்கல், கூடலூா் சாலை ஆகிய பகுதிகளில் நகராட்சி ஆணையா் எம்.சரவணக்குமாா் மற்றும் தெற்கு போலீஸாா் பிற்பகலில் ரோந்து சென்றனா். நகராட்சி சுகாதார அலுவலா் ஏ.அரசகுமாா் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தாா். நகா் மற்றும் புகா் பகுதிகளில் பிற்பகலுக்கு மேல் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டன.

அபராதம்: கட்டுப்பாடுகளை மீறிய 20-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு வருவாய் ஆய்வாளா் பி.குமாா் தலைமையிலான நகராட்சி ஊழியா்கள் ரூ.200 முதல் 500 வரை அபராதம் விதித்தனா்.

இதேபோல் கூடலூா் நகராட்சிப் பகுதிகளில் உள்ள எல்லைத்தெரு, அரசமர வீதி, பழைய பேருந்து நிலையம், பஜாா் வீதி, நகராட்சி தெரு, எம்.ஜி.ஆா்., கருணாநிதி காலனிகள், லோயா்கேம்ப் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

ஆணையாளா் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் அரசு உத்தரவை மீறுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு செய்தனா்.

இதோ போல் குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத் தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com