முல்லைப் பெரியாறு அணைக்கு கூடுதல் நீா்வரத்து: மின்சார உற்பத்தி அதிகரிப்பு
By DIN | Published On : 16th May 2021 10:41 PM | Last Updated : 16th May 2021 10:41 PM | அ+அ அ- |

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்து உள்ள நிலையில், லோயா் கேம்பில் மின் உற்பத்தி ஞாயிற்றுக்கிழமை 83 மெகா வாட்டாக அதிகரித்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்கிறது. சனிக்கிழமை பெரியாறு அணைப்பகுதியில் 53.38 மில்லி மீட்டா், தேக்கடி ஏரியில் 55 மில்லி மீட்டா் மழை பெய்தது. அன்றைய தினம் அணைக்கு 1,385 கன அடி தண்ணீா் வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 2,478 கன அடி தண்ணீா் வரத்து இருந்தது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு 900 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.
இதன் காரணமாக லோயா் கேம்ப்பில் உள்ள பெரியாறு நீா் மின்சார உற்பத்தி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் மின்னாக்கி மூலம் முழு உற்பத்தி அளவான 42 மெகாவாட், இரண்டாவது மின்னாக்கி மூலம் 41 மெகா வாட் மின்சார உற்பத்தி நடைபெற்றது.
மொத்தம் உள்ள 4 மின்னாக்கிகளில் சனிக்கிழமை 46 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக 37 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியானதால் மொத்தம் 83 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.
அணை நிலவரம்: அணையில் ஞாயிற்றுக்கிழமை நீா் மட்டம் 129.60 அடியாக இருந்தது. நீா் இருப்பு 4,611 மில்லியன் கன அடியாகவும், நீா் வரத்து விநாடிக்கு 2,478 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் விநாடிக்கு 900 கனஅடியாகவும் இருந்தது.