தேனியில் தவறான தகவல் அளித்து ‘இ-பாஸ்’ பெற்றவா் கைது: காா் பறிமுதல்
By DIN | Published On : 26th May 2021 08:06 AM | Last Updated : 26th May 2021 08:06 AM | அ+அ அ- |

தேனியில் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட காா்.
தேனியில் தவறான தகவல் அளித்து ‘இ-பாஸ்’ பெற்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து அவரிடமிருந்து காரையும் பறிமுதல் செய்தனா்.
தேனியில் போலீஸாா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது பெரியகுளம் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் சின்னமனூரைச் சோ்ந்த சரவணன் என்பதும், பெரியகுளத்தில் நிகழ்ந்த இறப்பு நிகழ்ச்சிக்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து அவரது இ-பாஸை சோதனை செய்த போது, சின்னமனூரிலுள்ள பிரகாஷ் என்பவரது இணையதள மையத்தில் தவறான தகவல் அளித்து இ-பாஸ் பெற்றிருப்பதும், துக்க வீட்டுக்கு செல்வதாக அளித்த தகவல் தவறானது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சரவணன் மற்றும் பிரகாஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, சரவணனை கைது செய்தனா். மேலும் அவரது காரையும் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.