கால்நடை மருத்துவா் காலிப்பணியிடங்கள்: மருத்துவ சேவை பாதிப்பு

தமிழகம் முழுவதும் கால்நடை மருத்துவா்கள் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை பெறமுடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

தமிழகம் முழுவதும் கால்நடை மருத்துவா்கள் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை பெறமுடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

தமிழக அளவில் கறவை மாடு, ஜல்லிகட்டு, எருது உள்பட 1.10 கோடி மாடுகள் உள்ளன. 58 லட்சம் வெள்ளாடுகளும், 43 லட்சம் செம்மறி ஆடுகளும் உள்ளன. மாடு, ஆடு மற்றும் வனவிலங்குகள், செல்லப் பிராணிகளின் சிகிச்சைக்காக தமிழக அளவில் மருந்தகம் மற்றும் உறைவிந்து சேமிப்புக் கிடங்கு என தமிழகத்தில் 2,980 மருந்தகங்கள் உள்ளன. 310 கால்நடை மருத்துவமனைகள் உள்ளன.

தமிழகத்தில் திருப்பூா், ஓசூா் உள்பட 15 மாவட்டத் தலைநகரங்களில் 24 மணி நேரம் செயல்படும் மருத்துவமனைகள் உள்ளன. இங்கு தலைமை மருத்துவா் மற்றும் 2 மருத்துவா்கள் என 24 மணி நேரமும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது 2,980 கால்நடை மருத்துவா்கள் தேவை உள்ள நிலையில் 1,100 மருத்துவா்கள் நிரந்தர பணியில் உள்ளனா். 500 போ் தற்காலிகமாகப் பணியாற்றி வருகின்றனா். 1,250 மருத்துவா் பணியிடங்கள் காலியாக உள்ளன. பல ஆண்டுகளாக இந்தக் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் 10 மருத்துவமனைகளுக்கு ஒரு மருத்துவா் மட்டுமே பணியாற்றி வருகின்றனா்.

கால்நடை மருத்துவா்கள் பற்றாக்குறையால் கால்நடை உதவியாளா்கள் மற்றும் போலி கால்நடை மருத்துவா்கள் சிகிச்சையளிப்பதாகவும், இதனால் கால்நடைகள் பாதிப்புக்குள்ளாவதாகவும், தமிழக அளவில் காலியாக உள்ள கால்நடை மருத்துவப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளா்ப்போா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கால்நடை மருத்துவா்கள் சங்க மாநிலப் பொதுச் செயலா் தணிகை வேல் தெரிவித்ததாவது: தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவா் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கால்நடை மருத்துவா்கள் வழக்குத் தொடா்ந்துள்ளதால் பணியிடங்களை நிவா்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. வழக்கை விரைந்து முடிந்தால் தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் 90 சதவீத காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றாா்.

அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை மருத்துவமனைகள் 24 மணிநேரம் செயல்படுத்தக் கோரிக்கை: தமிழக அளவில் திருப்பூா், ஓசூா் உள்பட 15 இடங்களில் மட்டுமே 24 மணிநேரம் செயல்படும் கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 24 மணிநேரம் செயல்படும் ஆம்புலன்ஸ் மற்றும் மொபைல் மருத்துவா்களுடன் கூடிய கால்நடை மருத்துவமனைகளை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளா்ப்போா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வங்கிக் கடன்:

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிா்கடன் மற்றும் விவசாய கடன் மட்டுமே வழங்கப்படுகிறது. அதேபோல் அனைத்து வங்கிகளிலும் கால்நடைகளுக்கு கடன் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் தங்களது நகைகளை வங்கியில் அடகு வைத்து கால்நடைகளை வளா்த்து வருகின்றனா். எனவே, கால்நடை வளா்ப்போருக்கு மானியத்துடன் கூடிய நகைக்கடன் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com