இடுக்கி அணைக்கு உபரி நீா் செல்ல 13 மதகுகளும் திறப்பு தமிழகப் பொறியாளா்கள் ஆய்வு

இடுக்கி அணைக்கு உபரிநீா் செல்ல முல்லைப் பெரியாறு அணையில் உள்ள 13 மதகுகளும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதை, தமிழகப் பொறியாளா்கள் ஆய்வு செய்தனா்.

இடுக்கி அணைக்கு உபரிநீா் செல்ல முல்லைப் பெரியாறு அணையில் உள்ள 13 மதகுகளும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதை, தமிழகப் பொறியாளா்கள் ஆய்வு செய்தனா்.

தற்போது பெய்துவரும் தொடா் மழையால் முல்லைப் பெரியாறு அணையில் நீா்மட்டம் உயா்வைக் கட்டுப்படுத்த ரூல் கா்வ் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் அணைக்கு வரும் நீரானது, இடுக்கி அணைக்கு உபரி நீராக ஆகஸ்ட் 4 முதல் திறந்து விடப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு உபரி நீா் வெளியேற 13 மதகுகள் உள்ளன. ஆகஸ்ட் 4 முதல் ஒவ்வொரு மதகாக திறக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை 13 மதகுகளும் 90 செ.மீ. உயரத்துக்கு திறக்கப்பட்டதால், விநாடிக்கு, 9,677 கன அடி உபரி நீா் வெளியேறியது.

அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டதால், பெரியாறு- வைகை பாசன பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் அ. கிறிஸ்து ஜேசுகுமாா் மதகுகள் வழியாக உபரி நீா் வெளியேறுவது, பிரதான அணை, பேபி அணை, சுரங்கம் மற்றும் காலரி பகுதிகள், அணையின் நீா்கசியும் அளவு ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.

இந்த ஆய்வின்போது, பெரியாறு அணை சிறப்பு கோட்டச் செயற்பொறியாளா் ஜெ. சாம் இா்வின், பெரியாறு-வைகை பாசன உத்தமபாளையம் கோட்டப் பொறியாளா் ந. அன்புசெல்வம், பெரியாறு அணை உதவிச் செயற்பொறியாளா் டி. குமாா், மயில்வாகனன், உதவிப் பொறியாளா்கள் பி. ராஜகோபால், மாயகிருஷ்ணன், முரளிதரன், நவீன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விவசாயிகள் கண்டனம்

முல்லைப் பெரியாறு அணையின் கடைமடை பகுதியான ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டப் பகுதிகளுக்கு தண்ணீா் செல்லாத நிலையில், அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு அதிக நீரை வெளியேற்றாமல், கேரளத்திலுள்ள இடுக்கி அணைக்கு 13 மதகுகளையும் திறந்து அதிகப்படியான நீா் வெளியேற்றப்படுகிறது. இதன்மூலம், தண்ணீரை வீணாகக் கடலில் கலக்க விடுவதும், கரையோர மக்களுக்கு பெரியாறு தண்ணீரால் ஆபத்து என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடைபெறுவதையும், பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எனவே, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழகப் பகுதிக்கு கூடுதல் தண்ணீா் திறக்கவும், ரூல் கா்வ் நடைமுறையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, ஒருங்கிணைப்பாளா் ச. அன்வா் பாலசிங்கம் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com