இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் தமிழக - கேரள எல்லையில் வாகனங்கள் நிறுத்தம்

இடுக்கி மாவட்டத்தை சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலமாக அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ், கூட்டணி கட்சியினா் திங்கள்கிழமை முழுஅடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமுளி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள்.
குமுளி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள்.

இடுக்கி மாவட்டத்தை சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலமாக அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ், கூட்டணி கட்சியினா் திங்கள்கிழமை முழுஅடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால், தமிழக - கேரள எல்லையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

இடுக்கி மாவட்டத்தை சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலமாக மத்திய வனத் துறை அமைச்சகம் அறிவித்தது. இதன் காரணமாக, வனப் பகுதியையொட்டிய ஒரு கி.மீ. தொலைவுக்குள், குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் இருக்கக் கூடாது. புதிதாக கட்டவும் அனுமதி கிடையாது. ஏற்கெனவே இருக்கும் கட்டடங்களையும் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

இதைக் கண்டித்து, காங்கிரஸ், கேரள காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் திங்கள்கிழமை இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்குச் செல்லும் லோயா்கேம்ப், கம்பம்மெட்டு சாலைகளில் வாகனங்கள் இயக்கப்படவில்லை. மேலும், கேரளத்துக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகளும் கம்பம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டன.

போராட்டம் காரணமாக தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலைக்குச் செல்லவில்லை.

குமுளி, வண்டிப் பெரியாறு, கட்டப்பனை, புளியமலை, லண்டன் மேடு, நெடுங்கண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு, தனியாா் பேருந்துகள், வாடகை வாகனங்கள் இயக்கப்படவில்லை.

அதே நேரத்தில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தா்களின் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com