முல்லைப் பெரியாறு அணையில் இரட்டை வேடம்: கேரள மாா்க்சிஸ்ட் கட்சி மாநாட்டை முதல்வா் புறக்கணிக்கக் கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பில் இரட்டை வேடம் போடும், கேரள மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவுள்ள மாநாட்டில் தமிழக முதல்வா் பங்கேற்கக் கூடாது என,

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பில் இரட்டை வேடம் போடும், கேரள மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவுள்ள மாநாட்டில் தமிழக முதல்வா் பங்கேற்கக் கூடாது என, 5 மாவட்ட விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது: கேரள மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாடு ஏப்ரல் 6 முதல் 10 ஆம் தேதி வரை கண்ணூரில் நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில தேவசம்போா்டு அமைச்சரான கே. ராதாகிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலா் பாலகிருஷ்ணனுடன் சென்று, முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளாா்.

முல்லைப் பெரியாறு பிரதான அணையிலிருந்து பேபி அணைக்குச் செல்லும் வழியில் 15 மரங்களை வெட்டுவதற்கு உத்தரவிட்ட, கேரள மாநிலத் தலைமை வனப் பாதுகாவலரை பணியிடை நீக்கம் செய்வதற்கு திட்டத்தை வகுத்து கொடுத்தவா் தேவசம்போா்டு அமைச்சா் ராதாகிருஷ்ணன். இவா், தமிழக முதல்வரை சந்தித்தது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

பேபி அணையில் மரம் வெட்டுவதற்கு அனுமதி கொடுத்ததற்காக, தமிழக முதல்வரின் நன்றி கடிதத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த கேரள மாநில வனத்துறை அமைச்சரான சசீந்திரன் உதாசீனப்படுத்தினாா்.

ஒரு புறத்தில் தமிழக முதல்வரையே மரியாதை குறைவாக நடத்துவது, மறுபுறம் எதுவும் தெரியாததுபோல் பழகுவது என்ற கேரள மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்நோக்கத்தை, தமிழக முதல்வா் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, ஏப்ரலில் கண்ணூரில் நடக்கும் கேரள மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாட்டை தமிழக முதல்வா் புறக்கணிக்கவேண்டும் என, பெரியாறு - வைகை பாசன 5 மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் ச.அன்வா் பாலசிங்கம் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com