ஓணம் பண்டிகை எதிரொலி: கம்பம் பூ சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.700-க்கு விற்பனை
By DIN | Published On : 28th August 2022 05:06 PM | Last Updated : 28th August 2022 05:15 PM | அ+அ அ- |

கம்பம் பூ சந்தையில் விற்பனைக்கு வந்ததுள்ள பூக்கள்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கம்பம் பூ சந்தையில், ஞாயிற்றுக்கிழமை மல்லிகை பூ கிலோ, 700 ரூபாய்க்கு விற்பனையானது.
தேனி மாவட்டம் அருகே உள்ளது கேரள மாநிலம். புகழ்பெற்ற ஓணம் பண்டிகை கேரளத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முக்கிய திருவிழா, செப்.9 ல் திருவோணம் பண்டிகையாகும். அன்று மகாபலி சக்கரவர்த்தி மக்களை சந்திக்கிறார் என்பது கேரள மக்களின் ஐதீகம்.
ஓணம் பண்டிகை 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவாகும். 10 நாட்களும் கேரள மக்கள் வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வண்ண பூக்களால் கோலமிட்டு அத்தப்பூ கோலம் என்று கொண்டாடுவார்கள். சிறந்த பூ கோலங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஆதலால் ஓணம் பண்டிகை என்றால் பூக்களின் தேவை அதிகரிக்கும்.
இதையும் படிக்க- சாப்பாடு கொடுப்பதில் தாமதம்: சொந்த மகளையே கொலை செய்த தந்தை
இடுக்கி மாவட்டம் அருகே கம்பம் உள்ளதால், இங்கு பழைய பேருந்து நிலைய சாலையில் பூ சந்தை உள்ளது. மதுரை, ஓசூர், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, சீலையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பூ சந்தைகளில் இருந்து பூக்கள் கம்பத்திற்கு வரும். பின்னர் இங்கிருந்து கேரளத்துக்கு செல்லும். ஓணம் பண்டிகை தொடக்க காலமாதலால் கம்பத்திற்கு அனைத்து வகையான பூக்கள் வரத்து நாளொன்றுக்கு சுமார் 5 டன் வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரம் (கிலோ ஒன்றுக்கு): செண்டு மல்லி - ரூபாய் 20 முதல் 30 வரை, செவ்வந்தி, 120, சம்மங்கி, 120, பட்டன் ரோஸ், 140, செண்டு மல்லி ஆரஞ்சு கலர், 40 , துளசி, 30, கோழி பட்டு, 50, அரளி, 160, மல்லிகை கிலோ ரூபாய் 700, தாஜ்மகால் ரோஸ், 300 க்கு விற்பனையானது. பூ சந்தை வியாபாரி ஹாமீது இப்ராகிம் கூறியது, ஓணம் பண்டிகையை முன்னிட்டு கம்பம் பகுதியில் இருந்து அனைத்து வகையான பூக்கள் அதிக அளவில் செல்லும்.
பூ வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான நாளாகும். கேரள மக்களும் நேரடியாக வாங்கி செல்வார்கள் என்றார்.