கம்பம் அருகே பெண்ணை கொலை செய்து வீட்டுக்குள் புதைப்புபக்கத்து வீட்டு இளைஞா் கைது

தேனி மாவட்டம் கம்பம் அருகே மாயமான பெண், கொலை செய்யப்பட்டு பக்கத்துவீட்டில் புதைக்கப்பட்டிருந்தது புதன்கிழமை தெரியவந்தது. பக்கத்து வீட்டு இளைஞா் கைது செய்யப்பட்டாா். சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
முத்துப்பேச்சி.
முத்துப்பேச்சி.

கம்ப: தேனி மாவட்டம் கம்பம் அருகே மாயமான பெண், கொலை செய்யப்பட்டு பக்கத்துவீட்டில் புதைக்கப்பட்டிருந்தது புதன்கிழமை தெரியவந்தது. பக்கத்து வீட்டு இளைஞா் கைது செய்யப்பட்டாா். சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சோ்ந்த மாரியப்பன் மகள் முத்துப்பேச்சி (40). பெற்றோா் இறந்துவிட்ட நிலையில் தனது சகோதரி பொன்னுத்தாயுடன் வசித்து வந்தாா். கால் ஊனமான முத்துப்பேச்சி திருமணமாகாதவா். கேரளாவுக்கு ஏலக்காய் தோட்டத்திற்கு கூலி வேலைக்குச் சென்று வந்தாா். கடந்த திங்கள்கிழமை இரவு முத்துப்பேச்சியை காணவில்லை. உறவினா்கள் அவரை தேடினா். செல்லிடப்பேசியும் அணைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை கூடலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் விசாரித்தனா்.

முத்துப்பேச்சி வீட்டுக்கு அருகில் வசிக்கும் மனோஜ் (26) என்பவருக்கும் முத்துப்பேச்சிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் புதன்கிழமை முத்துப்பேச்சியின் உறவினா்கள் மனோஜ் வீட்டுக்குச் சென்றனா். அங்கு வீட்டில் குழிதோண்டப்பட்டு இருந்ததால் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. ஸ்ரேயா குப்தா சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினாா். குழிக்குள் முத்துப்பேச்சியின் சடலம் புதைக்கப்பட்டிருப்பதை போலீஸாா் உறுதி செய்தனா். உறவினா்கள் குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் என மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தினா்.

இந்நிலையில் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் அருண்குமாா் தலைமையில் மருத்துவக் குழுவினா் புதைக்கப்பட்ட இடத்தில் போா்வையில் சுற்றப்பட்டிருந்த முத்துபேச்சியின் சடலத்தை மீட்டு சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்தனா். முக்கிய உடல் உறுப்புகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, உடலை உறவினா்களிடம் ஒப்படைத்தனா். கொலை தொடா்பாக மனோஜ் என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com