வனப்பகுதியிலிருந்து விவசாயிகளை வெளியேற்றும் நீதிமன்ற உத்தரவின் மீது மேல் முறையீடு செய்ய வலியுறுத்தல்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வருஷநாடு- மேகமலை வன நில விவசாயிகளை வனப் பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும்
வனப்பகுதியிலிருந்து விவசாயிகளை வெளியேற்றும் நீதிமன்ற உத்தரவின் மீது மேல் முறையீடு செய்ய வலியுறுத்தல்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வருஷநாடு- மேகமலை வன நில விவசாயிகளை வனப் பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற மதுரை உயா்நீதிமன்றக் கிளை உத்தரவின் மீது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் பெ.சண்முகம் தலைமையில் வெள்ளிக்கிழமை, நடைபெற்ற மாநாட்டில் மாவட்டத் தலைவா் ஜெயராஜ், செயலா் டி.கண்ணன், க.மயிலை ஒன்றியத் தலைவா் டி.ராமசாமி, மாநிலக் குழு உறுப்பினா் கே.ராஜப்பன், வனக்குழு தலைவா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், வருஷநாடு- மேகமலை வன நிலத்தில் விவசாயம் செய்து வரும் பாரம்பரிய வன விவசாயிகளை, ஆக்கிரமிப்பாளா்களாகக் கருதி வனப் பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற மதுரை உயா்நீதிமன்றக் கிளையின் உத்தரவின் மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். வன விவசாயிகளுக்கு வன உரிமைச் சட்டம் 2006-இன்படி வன உரிமைகள் வழங்க வேண்டும், வனப் பகுதியில் மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும். வருஷநாடு-அரசரடி, வாலிப்பாறை சாலைகளை சீரமைக்க வேண்டும். கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும், வருஷநாட்டில் துணை மின் நிலையம் அமைத்து மலை கிராமங்களுக்கு தடையற்ற மின் விநியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எம்.எல்.ஏ., உறுதி: இந்த மாநாட்டில் ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.மகாராஜன் (திமுக) பேசுகையில், வருஷநாடு-மேகமலை மலை கிராமங்களில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்குள்ள 14 பள்ளிகளில் 3,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நான் என்றும் துணை நிற்பேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com