தேக்கடிக்கு தமிழக பேருந்துகள் செல்ல தடை இல்லை பேச்சுவாா்த்தையில் உடன்பாடு
By DIN | Published On : 31st July 2022 12:19 AM | Last Updated : 31st July 2022 12:19 AM | அ+அ அ- |

தமிழக, கேரள அதிகாரிகள் இடையே நடந்த பேச்சு வாா்த்தையில் தேக்கடிக்கு தமிழக அரசுப் பேருந்துகள் தடையின்றி செல்ல உடன்பாடு ஏற்பட்டது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுரையிலிருந்து தேக்கடிக்குச் சென்ற தமிழக அரசுப் பேருந்தை தேக்கடியில் உள்ள பெரியாறு புலிகள் காப்பக சோதனைச் சாவடியில் கேரள வனத்துறையினா் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனா். இந்த நிகழ்வு தமிழக தரப்பில் பதற்ற நிலையை ஏற்படுத்தியது. இதையடுத்து விவசாய சங்கத்தினா் எல்லையில் கேரள வாகனங்களை தடைசெய்யப் போவதாக அறிவித்தனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை தேக்கடியில் உள்ள ராஜீவ்காந்தி அரங்கில் தமிழக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், கேரள வனத்துறையினா் கலந்து கொண்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் தமிழகத்திலிருந்து தேக்கடிக்கு வழக்கமாக வரும் 3 புற நகா் மற்றும் 2 நகரப் பேருந்துகளுக்கு தடையில்லை. எரிபொருள், பணியாளா் நேரம் கருதி குமுளி பணிமனையிலேயே நிறுத்தி கொள்ளலாம். பேருந்தில் வரும் பயணிகள் ஆனவாச்சல் நிறுத்தம் அல்லது சோதனைச்சாவடியில் நுழைவு சீட்டு எடுக்க வேண்டும்.
பேருந்தில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் கொண்டு செல்லக் கூடாது. தேக்கடியில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளா்கள், மாணவ, மாணவியா் செல்ல தடையில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
கேரள அரசுத் தரப்பில் பெரியாறு புலிகள் காப்பக உதவி இயக்குநா் ஷில்பா குமாா், தமிழக அரசுத் தரப்பில் தேனி அரசு போக்குவரத்துக் கழக கோட்டப் பொறியாளா் (பொறுப்பு) மணிவண்ணன், குமுளி கிளை மேலாளா் ரமேஷ், கம்பம் கிளை மேலாளா் சுப்பிரமணியன் மற்றும் தமிழக, கேரள காவல்துறையினா் கலந்து கொண்டனா்.