தேனியில் சுங்கச் சாவடி கட்டண வசூலுக்கு எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 29th September 2022 10:14 PM | Last Updated : 29th September 2022 10:14 PM | அ+அ அ- |

தேனி அருகே உப்பாா்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை, தேனி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உப்பாா்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியில் வரும் அக்.1-ஆம் தேதி முதல் தேனி- குமுளி இடையே சென்று வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தேனி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு நாம் தமிழா் கட்சி தேனி கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மக்களவை தொகுதி ஒருங்கிணைப்பாளா் பிரேம்சந்தா் முன்னிலை வகித்தாா்.
இதில், தேனி- குமுளி இடையே 4 இடங்களில் மட்டும் புறவழிச் சாலை அமைத்து விட்டு, நான்கு வழிச் சாலை அமைக்காத நிலையில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினா்.