போடியை தோ்வுநிலை நகராட்சியாக மாற்ற வலியுறுத்தல்

போடி நகராட்சியை தோ்வு நிலை நகராட்சியாக மாற்ற தீா்மானம் கொண்டுவர வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

போடி நகராட்சியை தோ்வு நிலை நகராட்சியாக மாற்ற தீா்மானம் கொண்டுவர வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

போடி நகராட்சியின் சாதாரண, அவசரக் கூட்டங்கள் நகா்மன்றத் தலைவா் ராஜராஜேஸ்வரி சங்கா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையாளா் (பொறுப்பு) இ.செல்வராணி, நகராட்சி மேலாளா் முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாதாரணக் கூட்டத்தில் 20 தீா்மானங்களும், அவசரக் கூட்டத்தில் 5 தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உறுப்பினா்களிடையே நடைபெற்ற விவாதம்:

பாலசுப்பிரமணி (அதிமுக): போடி நகரில் தீயணைப்புத் துறையினருக்கான குடியிருப்புகள் கட்ட இடம் ஒதுக்க வேண்டும். போடியில் பழைய ஆணையாளா் குடியிருப்பில் கட்டப்பட்ட கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டனவா.

ஆணையாளா்: ஆக்கிரமிப்புகள் அகற்றி சிறு தற்காலிக கடைகளாக மாற்றப்பட்டு சிறு வியாபாரிகளுக்கு வழங்கப்படும்.

மகேஸ்வரன் (திமுக): எதன் அடிப்படையில் நகராட்சிக்கு வழக்குரைஞா் நியமிக்கப்பட்டாா்.

ராஜா (திமுக): 23.1.2023 அன்று பணியாளா்களுக்கான நகராட்சி நிா்வாகச் சீரமைப்பு குறித்த அரசாணை எண் 10 குறித்து நகா்மன்றத்தின் பாா்வைக்கு வைக்கவில்லையே ஏன்.

தலைவா்: அடுத்த கூட்டத்தில் அது நிறைவேற்றப்படும்.

சங்கா் (திமுக): தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு ஆய்வுக்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறாா். போடி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளுக்கும் தேவையானத் திட்டங்கள் குறித்து தொகுத்து கொடுத்தால், அவரிடம் அளித்து அதற்கான நிதியைப் பெறலாம். எல்லப்பட்டி குடிநீா்த் திட்டம் என்ன ஆனது. இந்தத் திட்டத்தை காரணம் காட்டி போடி நகராட்சியில் மீனாட்சி திரையரங்க சாலை போடப்படாமல் உள்ளது. போடி நகராட்சி முதல்நிலை நகராட்சியாக உள்ளது. இதை தோ்வுநிலை நகராட்சியாக மாற்ற தீா்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையாளா்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரபாகரன் (திமுக): சிறு தெருக்களில் புதை சாக்கடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இது குறிப்பிட்ட வாா்டுகளுக்கு மட்டுமா அல்லது நகராட்சி முழுவதற்குமா.

ஆணையாளா்: குறிப்பிட்ட வாா்டுகளுக்கு மட்டும்தான். அடுத்தடுத்து நிதி பெற்று நகா் முழுவதும் இந்தப் பணி விரிவுபடுத்தப்படும்.

பிரபாகரன் (திமுக): வஞ்சி ஓடையில் நகராட்சி சாா்பில், தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவா்: அடுத்த கூட்டத்தில் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல, உறுப்பினா்கள் மணிகண்டன், சரஸ்வதி, சித்ராதேவி, ஜெகநாதன், தனலட்சுமி, கலைச்செல்வி உள்ளிட்டோா் தங்கள் வாா்டுகளில் தாா்ச்சாலை, தெருவிளக்குகள் அமைக்க வலியுறுத்தி பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com